ஏப்ரல் கடைசி வாரத்தை குறிவைத்து நகரும் தேர்தல்கள் ஆணையகம்
உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல்கள் சிறப்பு ஏற்பாடுகள் யோசளைள நாளைய தினம், நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட உள்ளதால், ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் திகதி ஒன்றை தேர்தல் ஆணையகம் பரிசீலித்து வருகிறது.
இந்த யோசனை குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு இந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள்
இதன்படி, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, சில திருத்தங்களுடன் அல்லது மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் யோசனைகளை நிறைவேற்றலாம் என்று தீர்ப்பளித்தது.
முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 2023 மார்ச் 9ஆம் திகதியன்று நடைபெறுவதாக நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி முன்னைய அரசாங்கத்தால் அது ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் புதிய யோசனை நிறைவேற்றப்பட்டு சபாநாயகரால் சான்றளிக்கப்பட்டவுடன், புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான அனுமதி தேர்தல் ஆணையகத்துக்கு கிடைக்கும் என்று தேர்தல் ஆணையர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.
அத்துடன் வேட்புமனுக்கள் அறிவிக்கப்பட்ட 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ரத்நாயக்க கூறியுள்ளார்.