அநுர அரசின் 200 ரூபாய் கொடுப்பனவை வழங்காமல் தோட்ட நிர்வாகம் புதிய திட்டம் - தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
பெருந்தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கு எதிரானதாகக் கூறப்படும் வன்முறைகள், ஒடுக்குமுறைகள், அழுத்தங்கள் மற்றும் வேலைப்பளுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அரசாங்கம் கொடுத்த 200 ரூபாவையும் பெற்றுக்கொள்ளவதற்கு பாரிய பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் முன்னணியின் செயலாளரும், கொட்டகலை பிரதேச சபை உறுப்பினருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மன உளைச்சலுக்கும் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பகுதியில் நேற்று(03.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுகிழமைகளில் விடுமுறை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சகல தொழிற்சங்கங்களும் இன, மத மற்றும் கட்சி பேதங்களை கடந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தொழிலாளர்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருவதாக தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த நாட்களில் பணியாற்ற வேண்டுமாயின் கைகாசு அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதனால் தொழிலாளர்களுக்காக செலுத்தப்பட வேண்டிய நுவுகு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகள் மற்றும் அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 200 ரூபாய் கொடுப்பனவு ஆகியவற்றைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பல தோட்டங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் காடுகளாக மாறியுள்ள நிலையில், புலி, சிறுத்தை மற்றும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
அதேவேளை, தோட்டப் பகுதிகள் தனியாருக்கு பிரித்துக் கொடுக்கப்படுவதன் மூலம் தோட்டங்கள் துண்டாடப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளும் வாழ்வாதாரமும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பிரச்சினைகள் ஒரு சில தோட்டங்களில் மாத்திரமன்றி, பல தோட்டங்களில் பரவலாக இடம்பெற்று வருகின்றது.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும், அதே சமயம் தொழிலாளர் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவொரு தொழிற்சங்கமாவது முன்வந்து போராட்டத்தை முன்னெடுத்தால், தமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்றார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan