அனோஜன் குறித்து ரஞ்சித் மத்தும பண்டார முன்வைத்துள்ள கோரிக்கை..
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது அவர், "சவூதி அரேபியாவில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வெளியாகியுள்ள செய்தியானது, அவரது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அரசு மௌனம் காக்காமல், இந்த விவகாரத்தில் உடனடியாகத் துரிதமாகச் செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உடனடி முயற்சிகள்..
வெளிநாடுகளில் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டியது நாட்டின் அரசின் தலையாய கடமையாகும் என அரசியல் தரப்பினரும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர்.

எனவே, அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு இராஜதந்திர வழிகளிலும், சட்ட ரீதியாகவும் அரசு உடனடி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்." - என்றார்.
அதேவேளை, "அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது.
அரசுக்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமாயின் இது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்திக் காட்ட வேண்டும்." என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. சவால் விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், "அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், ஜனநாயகத்தைக் காக்க விரும்பும் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழிக்கும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக நாம் ஏற்கனவே அனுராதபுரத்தில் 500 கிராமங்களுக்குச் சென்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.