மாங்குளத்தில் கவனிக்கப்படாத சிவன்சிலை : தமிழ் வளர்க்கும் சைவ பாரம்பரியம் சிதைகின்றதோ?
மாங்குளம் சந்தியில் உள்ள பெரிய சிவன் சிலை பராமரிப்பற்று இருக்கின்றது. ஆலய நிர்வாகத்தினரின் முயற்சி போதியளவில் இல்லை என மக்கள் அதிருப்தியினை வெளியிட்டு வருகின்றனர்.
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் திருவுருவச்சிலை இவ்வாறு கவனிப்பாரற்று இருப்பது கவலையளிப்பதாக பாடசாலை மாணவர்கள் பலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மாங்குளத்தில் அதிகளவான சைவசமயிகள் வாழ்ந்துவருகின்றனர்.எனினும் அவர்கள் ஆலய வழிபாடுகளிலும் சமய சம்பிர்தாயங்களிலும் காட்டிவரும் ஆர்வம் மிகக்குறைவாக இருப்பதாலேயே சிவன் சிலையின் இந்த நிலைமைக்கு காரணம் என குறிப்பிடும் மக்களும் உள்ளனர் என்பதும் நோக்கத்தக்கது.
வழிபாட்டுக்கு ஏற்ற சூழல்
சங்கர நாராயணர் திருக்கோயில் வளாகத்தினுள்ளேயே இந்த சிவன் சிலை அமைந்துள்ளது. அதனைச் சூழ உள்ள நிலத்தினை சுத்தமாக பேணுவதோடு சிவவழிபாட்டுக்கு ஏதுவான சூழலை பேணவேண்டியதும் அவசியமாகும்.
சிவ வழிபாடு உலகெங்கிலும் அறிவியல்பூர்வமானதாக நோக்கப்படுகின்றது.அந்த உண்மையை மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் கொண்டு சேர்க்க வேண்டும்.
நல்லதொரு ஆரம்ப சூழலினை உருவாக்கிய போதும் தொடர்ச்சியான முன்னெடுப்புக்களை பேண முடியாத சூழல் மாற்றியமைக்கப்பட வேண்டும் என வேர்கள் தமிழ்ச் சங்கம் நிறுவுனர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.
நல்வழிப்படுத்தும் சமய நெறிகள்
சமயம் சார்ந்த வழிமுறைகளை பின்பற்றி வாழ்தல் வாழ்வை வளமாக்கும்.கலாச்சார பண்பாட்டினை அது மேலோங்கச் செய்வதோடு தமிழ் மொழியின் இலக்கிய செழுமையையும் ஏற்படுத்தி விடும்.
மாங்குளத்தில் உள்ள சங்கர நாராயணர் திருக்கோயில் ஆன்மிக மணம் வீசும் வண்ணம் பேணப்படுவதற்குரிய மாற்றங்களை உரிய தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என ஆன்மிக ஈடுபட்டாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

