உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..!
தமிழர் தாயகம் தற்போது பெரும் நெருக்கடிகளையும், சவால்களையும் எதிர்கொண்டு நிற்கிறது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு வாக்கு வேட்டைக்காகச் சிங்களத் தேசியக் கட்சிகள் வடக்கு நோக்கிப் படையெடுத்து முகாமிட்டிருக்கின்றன.
சிங்கள தேசத்தின் தலைமைகள் தமிழர் தேசத்தின் குக்கிராமங்கள், மூலைமுடுக்கெல்லாம் சென்று தமிழ் மக்களிடம் பரிந்து பேசுவது ""ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாம்"" என்று தமிழில் ஒரு பழமெழி உண்டு. அப்பழமொழிபோலுள்ளது.
யுத்தத்தில் தோல்வியடைந்த தமிழர்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து அழித்தொழிக்கும் கண்ணுக்குப் புலப்படாத யுத்தம் ஒன்றைச் சிங்களப் பேரினவாதிகள் நடத்தத் தொடங்கிவிட்டனர்.
தமிழ் மக்களின் அரசியல் விடுதலை
தமிழ் மக்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தையும், தமிழின அழிப்பிற்கான நீதி கோரலையும், தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான சர்வதேச அரசியல் முன்னெடுப்புக்களையும் முடக்குவதற்கான மூலோபாயமாக இப்போது உள்ளூராட்சித் தேர்தலை சிங்கள தேசம் பயன்படுத்த தயாராகிவிட்டது.
பேரழிவிற்குள்ளான ஈழத்தமிழர்கள் தம்மை மீள் நிர்மாணம் செய்து, புதிய தமிழ் தேசியக் கட்டுமானங்களை செய்வதற்குக் கால அவகாசங்களை அவர்களுக்கு விட்டுக் கொடுக்காது தொடர்ந்தும் சிங்கள தேசம் அரசியல் ரீதியாக தமிழர்களைத் தோற்கடித்து வருகிறது.
இந்தப் பெருந்தோள்விக்கு இன்றைய அரசியற் தலைமைகள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். அரசியற் தலைமைகளின் சுயநல செயற்பாடுகளும், அரசியலறிவின்மையும், தான்தோன்றித்தனமான தன்முனைப்புகளும் தமிழ் மக்களின் அரசியலை அதள பாதாளத்தில் வீழ்த்தியிருக்கிறது.
நீண்ட ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழ்த் தேசிய இனம் ஆயுதப் போராட்டத்தின் ஒரு உச்சகட்ட வளர்ச்சியில் தமிழ் மக்களை ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பலப்படுத்தவும், பழக்கப்படுத்தவும், ஆயுதப் போராட்டம் சரியானது என்பதை நிரூபிப்பதற்குமே 30 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் அரசியலை புறக்கணித்து வந்த ஆயுதப் போராட்டம் 2004 இல் தம்மை ஒரு அரசியல் ரீதியாக சர்வதேச அரசியல் வெளியில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டது என்பதை நிரூபிப்பதற்காகவே சிங்கள தேசத்தால் நடத்தப்படும் தேர்தலை எதிர்கொண்டது.
அந்தத் தேர்தலுக்காக தமிழ் மக்கள் மத்தியில் இருந்த அனைத்து அரசியல் சக்திகளையும் ஒருங்கிணைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு அரசியல் சக்தியை உருவாக்கியது. அதன் மூலம் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் பெறக்கூடிய அதிகூடிய 22 நாடாளுமன்ற ஆசனங்களை வென்று ஆயுதப் போராட்டம் சரியானது என்பதையும், தமிழ் மக்களின் தேசியத்தையும் ஒரு தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டியது.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் பேழிவுக்கு உட்பட்டது பெரும் மனித பேரவலத்தை தந்தது மட்டுமல்லாது தமிழ்த்தேசிய கட்டுமானங்கள் அனைத்தும் சிதைவடைந்தபோது தமிழ் மக்களின் மனங்களில் நம்பிக்கையீனங்ளையும், விரக்தியையும் ஏற்படுத்தியிருந்தது.
இனப்படுகொலை
அதேவேளை இனப்படுகொலை என்ற ஒரு வரத்தை தந்ததோடு மாத்திரமல்ல அது தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் சக்தியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு அரசியல் சக்தியை பலப்படுத்தியும் சென்றது.
இந்த சாதக தன்மைகளைக் ஊன்றுகோலாகவும், முதுசமாகவும் கொண்டு தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் வெளியை திறக்காமல் தமிழ் தலைமைகள் தமக்கு இடையே அதிகாரப் போட்டியிலும், சுயநல பொருளீட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் தந்த இனப்படுகொலை என்ற முதுசத்தை சின்னா பின்னப் படுத்தியதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் மக்களின் தமிழ்த்தேசிய அரசியல் நிறுவன கட்டுமானத்தையும் சிதைத்து விட்டனர்.
இங்கே ஒரு கூட்டம் சிதைப்பதற்கான வேலையை செய்தது. இன்னொரு கூட்டம் அவ்வாறு சிதைப்பதை கண்டம் காணாமல் இருந்தது. மற்றொரு கூட்டம் தம்மை அறியாமலே சிதைப்பதற்கு இடம் கொடுத்து விலகி நின்றது.
இன்னும் ஒரு அணி கூட்டிக் கட்டப்பட்ட இந்த கட்டுமானத்தில் இருந்து விலகி சென்றது. ஆக மொத்தத்தில் தமிழ அரசியல் பரப்பின் அனைத்து தலைவர்களும் இந்தத் தவறுக்கும், குற்றத்துக்கும் பொறுப்புடையவர்கள்.
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பதுதான் உண்மை. தமிழ் தேசிய கட்டுமானத்தில் ஆயுதப் போராட்டம் முக்கிய பாத்திரம் வகித்தது மாத்திரமல்ல எதிர்காலத்துக்கு தேவையான அனைத்து முன்னுதாரணங்களையும் அது எமக்கு தந்து இருக்கிறது. ஆயுதப் போராட்டம் தமிழ்த் தேசியக் கட்டுமானத்தில் கிழக்கை மையப்படுத்திய தமிழ் தேசியக் கட்டுமானம், கிழக்கை வலுப்படுத்துவதற்கான பொருளாதாரக் கட்டுமானம், கிழக்கை வலுப்படுத்துவதற்கான தலைமைத்துவ கட்டுமானம் என பல முன்னுதாரணங்கள் உண்டு.
"" வடக்கை விட்டுக் கொடுப்பினும் கிழக்கை விட்டுக் கொடுக்க மாட்டேன்"" என தலைவர் பிரபாகரன் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு அனுப்பிய செய்தி இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாகான சாட்சியும் ஆகும். தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது கிழக்கின் தலைவர்களை தலைமை தாங்க தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் முதலாவது தெரிவாக மாமனிதர் பரராஜசிங்கம் அவர்களின் பெயரே பிரேரிக்கப்பட்டது.
ஆயினும் அவர் முன்னிரவே தூங்கும் பழக்கமுடையவர் என்பதனால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னிரவுதான் பொழுது புலர்வதாக இருந்தது என்ற அடிப்படையில் அவர் 24 மணித்தியாலமும் தொடர்புக்கு வரமுடியாதவர் என்பதனாலேயே இரண்டாவதான சம்மந்தனின் தெரிவு இடம்பெற்றது. தேசியம் என்பதற்கு எதிரான சாதிவாதம், பிரதேசவாதம், பரம்பரை முனைப்பு, மதவாதம் என்பவற்றைக் களைந்து, கடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்டமைக்கப்பட்டது.
ஒரு காலத்தில் அச்சம், ஐமிச்சம் காரணமாக எதிரும் புதிருமாக நின்று சண்டையிட்டவர்களும் ஒரு மேசையில் அமர்த்தப்பட்டு வேற்றுமைகள் களையப்பட்ட ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழ்த் தேசியம்
அத்தகைய கூட்டமைப்பின் தலைமை சம்பந்தனின் தவறானதும், சுயநலமானதும், தன்முனைப்பானதும், ஜனநாயக முறைமைக்கு விரோதமானதும், எதேச்சதிகாரப் போக்கும், பதவி நாற்காலி சுகங்களுக்காக அனைத்து தமிழ் தேசிய முறைமைகளும், பண்புகளும் காற்றில் பறக்க விட்டதன் விளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடைந்து சுக்குநூறாக்கப்பட்டது.
இத்தகைய தமிழ்த் தேசியச் சிதைவின் வெளிப்பாடுதான் வடக்கில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள தேசியக் கட்சியான எம்பிபி கூடிய ஆசனங்களை பெற்றிருக்கிறது. ஆனால் கிழக்கில் தமிழ் தேசிய வாக்கும், உணர்வு தக்கவைக்கப்பட்டிருக்கிறது.
அங்கு தமிழ்த் தேசியத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விடயம் தான். ஆனாலும் வடக்கில் யாழ் தேர்தல் தொகுதியில் இதுவரை காலமும் சிங்கள தேசியக் கட்சிகள் ஒரு ஆசனத்தையே பெற்றிருந்தன.
ஆனால் இம்முறை மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்றமை என்பது மிக அபயகரமான அரசியல் போக்கு. தமிழ் தேசியத்திற்கு கிடைத்த பெரும் தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.
அதே நேரத்தில் இவ்வளவு காலமும் முன்னிலையில் இருந்த தமிழரசு கட்சி பெரும் தோல்வியை சந்தித்து ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
""நாடாளுமன்றத் தேர்தலில் சிங்கள தேசியக் கட்சியான எம்பிபி கட்சி பெற்ற வாக்கு கடந்த கால தேர்தல்களில் சிங்கள தேசிய கட்சிகள் பெற்ற வாக்குக்கு ஒப்பானதுதான் ஆனால் விகிதாசார தேர்தல் முறை நடைமுறைக்குள்ளால் அவர்கள் மூன்று ஆசனங்களை பெற்றுவிட்டார்கள்"" என்று தமிழ் தலைமைகள் சிங்கள தேசியக்கட்சி பெற்ற வெற்றியை சமப்படுத்த அல்லது மட்டம் தட்ட முனைகின்றனர்.
இந்தக் கூற்று ஏற்புடையதல்ல. இது தமிழ் மக்களின் உள்ளக அரசியலை மட்டுமன்றி சர்வதேச அரசியலையும் பாதித்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசியக் கட்சிகளின் ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் அதிகரிக்கவும் உதவியுள்ளது.
இலங்கையின் சர்வதேச அரசியல் உறவு முறை அல்லது கொள்கை வகுப்பு என்பது இலங்கையின் உள்ளூர் அரசியல் போக்கிலும் அதன் விளைவுகளில் இருந்தும் தோற்றம் பெறுகின்றன, உள்நாட்டு அரசியல் நிலையிலிருந்து சர்வதேச அரசியல் வியூகம் வடிவமைக்கப்படுகின்றது.
தமிழர் தேசிய இனம் என்பதை மறுக்கின்ற, தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை மறுக்கின்ற, தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை மறுக்கின்ற ஜேவிபி எனப்படும் இடதுசாரி கட்சி இன்று என் பி பி என்னும் அரசியல் சக்தியாக இலங்கை அரசை வழிநடத்துகிறது.
சுனாமி பேரனர்த்தத்தின் போது தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களை கூட கிடைக்க விடாமல் தடுத்து நிறுத்திய, வடகிழக்கு தற்காலிக இணைப்புக்கு எதிராக அதாவது தமிழர் தாயகத்தை சட்டரீதியாக பிரித்த, தமிழ் மக்களை அழிப்பதற்காக மஹிந்த அரசாங்கத்துக்கு ராணுவத்திற்கு சிங்கள இளைஞர்களை திரட்டி கொடுத்த ஜேவிபி இப்போது எம்பிபி என்ற புதிய முகமூடியை அணிந்து தமிழ் மக்களுக்காக பரிந்து பேசி தமிழ் மக்களின் வாக்கை பெறுவதில் அதீத நாட்டம் காட்டுகிறது.
வட மாகாணத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் என் பி பி கட்சிக்கு கிடைத்த வெற்றியை போல எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலிலும் என்பிபி வெற்றி பெற்றால் அதனைக் காட்டி இலங்கைத் தீவின் இனப் பிரச்சனை சார்ந்து பேசுபவர்களிடம் தமிழர்களின் "தமிழ் தேசிய அரசியல்" என்பதனை வடக்கில் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என சிங்கள தேசம் ஒரு சர்வதேச பரப்புரையை மேற்கொள்ள வாய்ப்பாகிவிடும்.
புலம்பெயர் தமிழர்கள்
இதன் மூலம் தமிழர்கள் சிங்கள தேசத்துடன் இணைந்து வாழ விரும்புகிறார்கள் என்றும்,தமிழ் மக்கள் பழைய கசப்பான விடயங்களை மறந்து புதிய இலங்கைத் தேசியத்துக்குள் வாழ விரும்புகிறார்கள் என்றும் இவ்வாறு மக்களின் ஜனநாயக விருப்பை யாரும் குழப்ப வேண்டாமென சர்வதேச நாடுகளிடமும் மனித உரிமை அமைப்புகளிடமும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுக்கவும் முடியும்.
அதேபோல புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளும் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச நீதி விசாரணை, மற்றும் இனப்படுகொலைக்கான தீர்வு விடயங்களை நீர்த்துப் போகச் செய்ய முடியும்.
ஈழத் தமிழர்கள் சிங்கள தேசத்துடன் ஒட்டி வாழ விரும்புகிறார்கள், ஆகவே புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அவர்களை குழப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சிங்கள தேசத்தால் முன் வைக்கவும் முடியும். இது மிகவும் அபயகரமான ஒரு அரசியல் போக்கு.
வெறும் சுயநல பதவி அரசியலை நடத்துவதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. மாறாக தமிழினம் தொடர்ந்து தமிழர் தாயகத்தில் அழிக்கப்பட்டு தமிழர் தாயகம் சிங்கள தேசமாக மாற்றப்பட்டு விடும் அபாயமே இப்போது தமிழ் மக்களின் அரசியலின் கழுத்தின் முன்னே கத்தியாக நிற்கிறது. இந்நிலையில் தமிழரசு கட்சி ""நாடு அனுராவோடு ஊர் எம்மோடு"" ஏன் ஒரு அபத்தமான கோஷத்தை முன் வைக்கிறார்கள்.
வாய்க்கு வக்கனையாக இருந்தால் எதனையும் கோசமாக முன்வைத்து விடுவீர்களா? இலட்சியத்திற்கான கொள்கை என்பது என்னவென்று புரியவில்லையா? இந்தக் கோஷத்தை இதை பார்க்கின்ற போது “அனுரா குடும்ப நடத்தட்டும் நாம்தான் கணவன்“ என்பது போல் உள்ளது.
நாடு அனுரா போடு என்றால் ஊர் எப்படி உங்களோடு இருக்க முடியும்? ""நீங்க வேற நாடு ஐயா நாங்க வேற நாடு"" என்ற இந்தக் கோஷத்தை பலமுறை கேட்டிருப்பீர்களே இதை பார்த்தாவது நீங்கள் திருந்த வேண்டாமா? அறிவார்ந்து தமிழ் தேசியம் பேசுவோர் "தென்இலங்கை" என்றும் "வட-கிழக்கு" என்றும் ஏன் பேசுகின்றனர்? "தமிழர்தேசம்" என்றும் "சிங்கள தேசம்" ஏன் பேசுகின்றனர்? இவற்றில் உள்ள உள்பொருட்களை புரிந்தாவது தமிழ் மக்களின் இலட்சியத்திற்கான பயணத்தில் கொள்கைகளையும், கோஷங்களையும் முன்வைக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
அதுவே ஆரோக்கியமான தேசியக் கட்டுமானங்களுக்கும், அரசியல் செயற்பாடுகளுக்கும் உதவவல்லது. இப்போது வடக்கின் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. இந்நிலையில் தமிழ் தரப்பு இந்தத் தேர்தலை மிகச் சரியாக கையாள வேண்டும். தமக்கிடையே குடும்பிச்சண்டையிட்டு சிங்கள தேசியக் கட்சிகள் ஆசனங்களை கைப்பற்ற இடமளிக்கக்கூடாது.
இப்போது எமக்கு முன்னே உள்ள சவால் தமிழ் மக்களின் வாக்குகளை ஒன்று குவிப்பதுதான். தமிழ் மக்களின் வாக்குகளை ஒன்று குவிப்பதற்கு என்ன உத்திகளை கையாள முடியுமோ அந்த உத்தியை விரும்பியோ, விரும்பாமலோ கட்சி பேதங்களைக் கடந்து ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். அது போட்டி தவிர்ப்பு கனவான் ஒப்பந்தமாக மட்டுமே அமைய முடியும்.
இருக்கின்ற அரசியல் சூழலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் வாக்குகளை ஒன்று குவித்து, தமிழ் தேசியத்தை நிலைநாட்டவும், மீள்கட்டுமானம் செய்யவும், தமிழர் தாயகத்தில் சிங்கள தேசிய கட்சிகளின் படர்ச்சியையும், விஸ்தரிப்பையையும் தடுப்பதற்கான ஒரே வழியாக அனைத்து தமிழ் தேசியம் பேசும் கட்சிகளும் ஒரு போட்டி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு வருவதுதான்.
இதன் மூலம் உள்ளூராட்சி தேர்தலில் வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளில் யார் குறிப்பிட்ட வட்டாரங்களில் முன்னிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஏனையோர் ஆதரவளித்து தமது வாக்குகளை அவர்கள் பக்கம் திருப்ப வேண்டும்.
அதுவே இன்றைய சூழ்நிலைக்கு பொருத்தமானது. இவ்வாறு வாக்குகளை ஒன்று குவித்து வெற்றி அடைந்த பின்னர் எவ்வாறு சபைகளை அமைப்பது, யார் யாருக்கிடையே பங்கிடுவது என்பதனை அவரவர் கட்சிகளுக்குரிய பங்கையும், பாத்திரத்தையும் சமமாகவும், நேர்மையாகவும் புரிந்துணர்வோடும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்.
எனவே முதலில் நாம் எமக்கான வாக்கை பெற்றுக்கொண்டு அதற்குரிய பாத்திரத்தை அவரவருக்கு வழங்க முடியும். இப்போது எம்முன்னே உள்ள சவால் சிங்கள தேசியக் கட்சிகள் குறிப்பாக என் பி பி ஆசனங்களை கைப்பற்றுமாக இருந்தால் தமிழர் தாயகக் கோட்பாடும், தமிழர் தேசியமும் சிதைக்கப்பட்டு விடும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான 76 ஆண்டு கால போராட்டத்தில் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டரை லட்சம் தமிழர்களின் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் அர்த்தமற்றதாகி போய்விடும். அத்தோடு எதிர்காலத்தில் தமிழ் மக்கள் அரசியல் உரிமைக்கான எந்த முன்னெடுப்புக்களையும் செய்ய முடியாது முடக்கப்பட்டு சிங்கள இனமயப்படுத்தப்பட்டு விடுவர்.
ஆகவே இப்போது “தமிழ் மண்ணில் இருந்து ஜேவிபியை துரத்தி அடிப்போம்“ “தமிழ் மண்ணிலிருந்து என் பி பி யை தோற்கடிப்போம்“ “தமிழரின் வாக்கு தமிழ் தேசியத்திற்கே“ “எங்கள் மண்ணும் எங்கள் மக்களும் எம்மோடே““ போன்ற கோஷங்களோடு உள்ளூராட்சித் தேர்தலை தமிழர் தரப்பு எதிர்கொள்ள வேண்டும். இத்தகைய ஒரு போட்டி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு ஆதரவளிப் போரும், உடன்படுவோரும் தமிழ்த் தேசிய முன்னோடிகளாக அமைவர்.
மாறாக போட்டி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு வரமறுப்போரும் எதிர்ப்போரும் தமிழ்த் தேசிய விரோதிகள் அல்லது தமிழ் தேசத் துரோகிகள் என்ற பட்டியலில் அடங்குவர். இப்போது தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான ஐக்கியமே முக்கியம்.
நாம் ஏதோ ஒரு வகையான ஐக்கியத்துக்குள் வரவேண்டும். அத்தகைய ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு மதத் தலைவர்களும், சிவில் சமூக அமைப்புகளும், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் முன்வந்து தமிழ் தேசியம் பேசும் அரசியல் கட்சிகளின் ஐக்கியத்தை வலியுறுத்த வேண்டும்.
இதுவே தமிழ் மக்களை அடுத்த கட்ட வெற்றிக்கான பாதைக்கு வழிகாட்டியாகவும், திறவுகோலாகவும் அமையும். தமிழ்த் தேசியத்தின் முன்னே யாரும் பெரியவர்களும் கிடையாது, சிறியவர்களும் கிடையாது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 20 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.