மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்.. வெளியான தகவல்
அம்பாறை - நாவிதன்வெளி 05ஆம் குடியேற்றக் கிராமத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தங்கியிருந்து தொழில் புரிந்து வந்த 20 வயதான இளைஞர் நேற்று (25) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர், தனிப்பட்ட விவகாரம் காரணமாகத் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விசாரணை நடவடிக்கைகள்
இந்நிலையில், மாவட்ட நீதிவானும் கல்முனை நீதிமன்றப் பதில் நீதிவானுமாகிய தயாபரன் திவாகரின் கட்டளையின் பிரகாரம், பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி பஹத் ஸமான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

அத்துடன், சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம்.எம். றிபாஸ்தீனின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில், தூக்கினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சவளக்கடை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.