அரசியலுக்கு வருவது தொடர்பில் மகிந்தவின் இளைய மகன் ரோஹித பகிரங்க அறிவிப்பு
தான் ஒருபோதும் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வருகைத் தந்திருந்த ரோஹித ராஜபக்ச, அங்கிருந்து வெளியேறிச்செல்கையில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒத்துழைப்பு வழங்குவேன்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சுப்ரீம் செட் (SupremeSAT) செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக என்னை இன்று அழைத்திருந்தார்கள்.
எனினும், முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய எந்தவொரு தவறான செயலையும் நாங்கள் செய்யவில்லை.

விசாரணைக்கு அழைத்த அதிகாரிகள் அவர்களது கடமைகளைத்தான் செய்கின்றார்கள். இது தொடர்பான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
இந்த விசாரணைக்கு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு என்னை இன்று அவர்கள் அழைத்திருந்தார்கள். மீண்டும் விசாரணைக்கு வருமாறு அறிவித்தல் ஏதும் விடுக்கப்படவில்லை, எனினும், அப்படி அழைக்கப்பட்டால் நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
அடுத்தது, அரசியலுக்கு வரும் எந்தவொரு எண்ணமும் எனக்குக் கிடையாது. அதேசமயம், எனது சகோதரர்கள் மீதும் எனக்கு எந்தவொரு அதிருப்தியும் இல்லை.
எனது மூத்த சகோதரர், முன்பைவிடவும் அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றவராக வெளிவருவார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.