ஒரு தசாப்த கால சர்ச்சை.. நான்கு மணிநேர வாக்குமூலமளித்த மகிந்தவின் இளைய மகன்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச இன்று (26) நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகினார்.
சுப்ரீம் செட் (SupremeSAT) செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகினார்.
இந்நிலையில், சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலமளித்த பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012 மே 23 அன்று சுப்ரீம் செட் நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அதே ஆண்டு நவம்பரில் சீனாவிலிருந்து 'சுப்ரீம் செட் -1' (SupremeSAT-1) என்ற பெயரில் இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
எனினும், இது 'சைனா செட் -12' (ChinaSat-12) என்ற சீனச் செயற்கைக்கோளின் தகவல் தொடர்புப் பகுதியை வாடகைக்கு எடுத்த திட்டம் எனத் தொழில்நுட்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
343.9 பில்லியன் ரூபா வருமானம்
"இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள்" என விளம்பரப்படுத்தப்பட்டமை, ராஜபக்ச குடும்பத்துடனான நெருக்கத்தால் விசேட சலுகைகள் பெறப்பட்டமை மற்றும் பொது நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக இத்திட்டம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

2025 ஓகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இத்திட்டத்தில் அரசாங்கம் எவ்வித நிதியையும் முதலீடு செய்யவில்லை எனவும், 2015 முதல் 2023 முற்பகுதி வரை அந்நிறுவனம் 343.9 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாகவும் முதலீட்டுச் சபை அறிக்கைகளை மேற்கோள்காட்டித் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் (ITU) தரவுகளின்படி 'சுப்ரீம் செட் -1' அல்லது 'சைனா செட் -12' என்ற பெயரில் இலங்கைக்குச் சொந்தமான எந்தவொரு செயற்கைக்கோளும் விண்வெளியில் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த சுப்ரீம் செட் நிறுவனம், பொது நிதியைப் பயன்படுத்தாத தமது தனியார் செயற்கைக்கோள் 87.5 பாகை கிழக்கு நெடுங்கோட்டில் தொடர்ந்து செயற்படுவதாகவும், தமக்கெதிராக அரசியல் ரீதியான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தது.
அரசாங்கத்தின் அறிவிப்புகள், சர்வதேசத் தரவுகள் மற்றும் நிறுவனத்தின் நிலைப்பாடுகளுக்கு இடையே காணப்படும் இவ்வாறான முரண்பாடுகளுக்கு மத்தியில், ரோஹித ராஜபக்சவிடம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.