இணையப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள்: சட்டமா அதிபர் வழங்கிய தகவல்
ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் பல திருத்தங்களை அறிமுகப்படுத்த நடப்பு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
சட்டத்தின் சட்டபூர்வமான தன்மையை சவால் செய்யும் நான்கு அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான விசாரணையின் போது, மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்ன நேற்று நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா உட்பட பல தரப்பினரால், குறித்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டவிரோதமானது என்று வாதிடப்பட்டுள்ளது.
விரைவில் அமைச்சரவைப் பத்திரம்
இந்தநிலையில், நடப்பு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்த அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று மன்றாடியார் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய அரசாங்கம் திருத்தங்கள் தொடர்பான நடைமுறைகளை ஆரம்பித்திருந்தாலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த செயன்முறை நிறுத்தப்பட்டது என்றும் மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |