டயானா கமகேவின் பிடியாணை உத்தரவில் நீதிமன்றத்தின் திடீர் மாற்றம்
புதிய இணைப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது.
டயானா கமகே ஒரு மனு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை (Diana Gamage) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை பிறப்பித்துள்ளார்.
குறித்த உத்தரவு இன்று (06) காலை கொழும்பு தலைமை நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
07 குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதற்காக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்தது மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் தவறான அறிக்கைகளை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகே மீது குற்றப்புலனாய்வுத் துறை (CID) 07 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |