உலகத்தமிழர் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தாத அம்பிகை அம்மையின் செய்தி
மக்கள் ஊடகங்களைச் சரியான செய்தி வழிகளில் வழிநடத்தத் தவறியதினுடைய விளைவு, ஊடகங்களினுடைய சமூகம் மீதான ஒரு பொறுப்பற்ற போக்குத்தான், அம்பிகை அம்மையின் செய்தியானது உலகத்தமிழர் மத்தியில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையையோ அல்லது ஒவ்வொருவர் வீடுகளிலும் ஒரு காட்சியாக இடம்பிடிக்கவில்லை என மனித உரிமை செயற்பாட்டாளர் சன் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
அம்பிகை அம்மையாரின் சாத்வீக போராட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 27ஆம் திகதி தொடக்கம் பிரித்தானியாவில் பிரித்தானிய அரசு, ஐக்கிய நாடுகள் சபை, இந்த அனைத்துலக சமூகத்தின் முன் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மனசாட்சியின் வடிவமாக எங்கள் தமிழீழ விடுதலை போராட்டத்துக்கு நீண்ட காலமாகக் குரல் கொடுத்த குடும்பத்தின் வாரிசாகச் சகோதரி அம்பிகை செல்வகுமார் அவர்கள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
உண்மையிலே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இன்றுடன் 300 மணித்தியாலங்களை நெருங்குகிறது.
ஆனால் இது வரையில் 19000இற்கு கிட்டிய உலக தமிழர்கள் தான் சகோதரிக்கு ஆதரவாகப் பிரித்தானிய அரசாங்கத்தை நோக்கிக் கையொப்பமிட்டுள்ளனர். இது ஒட்டுமொத்த உலக தமிழ்ச் சமூகமும் வெட்கி தலைகுனிய வேண்டிய வேதனையான விடயம்.
ஊடகங்கள் மட்டுமில்லை, மக்களினுடைய நுகர்வு, கலாச்சாரம், அவர்கள் எந்த தகவலை நோக்கி இந்த உலகத்தில் ஓடி கொண்டிருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் தான் இந்த ஊடகங்களும் அதன் பின்னால் ஓடிக்கொண்டுள்ளது.
இப்போது இருக்கும் உலக சூழலுக்கு ஏற்ற வகையில் தான் ஊடகங்களின் பயணம் இருக்கும். ஆனால் மக்கள் ஊடகங்களைச் சரியான செய்தி வழிகளில் வழிநடத்தத் தவறியதினுடைய விளைவு, ஊடகங்களினுடைய சமூகம் மீதான ஒரு பொறுப்பற்ற போக்கித்தான் இந்த செய்தியானது உலகத்தமிழர் மத்தியில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையையோ அல்லது ஒவ்வொருவர் வீடுகளிலும் ஒரு காட்சியாக இடம்பிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.