இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உறுப்பினரின் மோசடி: நாடாளுமன்றில் அம்பலப்படுத்திய அமைச்சர்
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20.10.2023) கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை தவறிவிட்டதாக சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்மகே ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் சபாநாயகர் வழங்கிய அறிவிப்புக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபைக்கு கடிதம்
மேலும், ஊழல் தடுப்பு யோசனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், “இலஞ்ச ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், அரசியலமைப்பு சபைக்கு கடிதம் எழுதி, சபையின் பத்து உறுப்பினர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.
எவ்வாறு இலஞ்ச ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எவ்வாறு அரசியலமைப்பு சபையை அச்சுறுத்த முடியும்.
இந்தநிலையில் அரசியலமைப்பு சபையை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே ஆகியோர், குழு செயற்பாடுகளுக்கு அழைப்பு விடுத்து, அரசியலமைப்புச் சபைக்கு எதிரான செயற்பாடுகளில் பங்கேற்க இணங்கியதன் மூலம் மனசாட்சிக்கு விரோதமான நடத்தையில் ஈடுபட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சுமத்தியியுள்ளார்.
சிறப்புரிமை விடயம்
அரசியலமைப்புச் சபைக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சபையில் முன்வைக்க மகிந்தானந்த அளுத்கமகேக்கு, நீதி அமைச்சர் அனுமதி வழங்கினார் என சபாநாயகர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“இருவரும் 2022 ஆம் ஆண்டின் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் இலங்கை மக்களின் 'அமைப்பு மாற்றம்' பற்றிய கோரிக்கைகள் பற்றி குறிப்பிட்டனர்.
எனினும் அவர்கள் கேட்ட 'முறைமை மாற்றம்' ஒன்றுதான் என்பதை தாம் உறுப்பினர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
மக்கள், தங்கள் பிரதிநிதிகள் கௌரவமாகவும், நல்லெண்ணத்துடனும், நியாயத்துடனும், மக்களின் நலன்களுடனும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அரசியலமைப்பு அமைப்புக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, சபை உறுப்பினர்களின் வீடுகளைச் சுற்றி வளைக்குமாறு மக்களை அழைப்பது மனசாட்சியற்றது, அத்துடன் நெறிமுறையற்றது.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமைகள் விடயத்தில் இவ்வாறான நடத்தைக்கு, நாடாளுமன்ற சபை இணங்காது.” அதேநேரம் அரசியலமைப்புச் சபையை சிறுமைப்படுத்த முயற்சிக்கும் நீதி அமைச்சரின் செயலை இது பிரதிபலிக்கிறது என்பதையும் நான் அறிந்துள்ளேன்.” என சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.