புலம்பெயர் மக்களிடம் அதிக பணம் உள்ளது! இலங்கை சொர்க்கத்தை போன்ற ஒரு தேசம்: தமிழ் தொழிலதிபர் (Video)
புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தை கொண்டு வியாபாரம் செய்பவர்கள் அல்ல என புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எங்களிடம் விடுதலைப் புலிகளின் பணம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யூடியுப் சனலொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கந்தையா பாஸ்கரன் கூறுகையில், இலங்கை சொர்க்கத்தை போன்ற ஒரு தேசமாகும். நான் பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றேன்.
ஆனால் இலங்கையை இறைவனின் கொடை என்று கூறலாம். எங்களிடம் பல சொத்துக்கள் உள்ளன, எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி - பொதுவாக இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?
கந்தையா பாஸ்கரனின் பதில் - புலம்பெயர் மக்களிடம் அதிக அளவில் பணம் காணப்படுகின்றது. இந்த நாட்டில் பல்வேறு சொத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றை கட்டி எழுப்பி வருமானம் ஈட்ட முடியும்.
எனினும் எங்களிடம் ஓர் சரியான கட்டமைப்பு கிடையாது. எங்களது அரசியல்வாதிகளிடம், அது தமிழ் அரசியல்வாதியாக இருக்கலம் சிங்கள அரசியல்வாதியாக இருக்கலாம் அல்லது முஸ்லிம் அரசியல்வாதியாக இருக்கலாம். முதலாவதாக அவர்கள் இந்த நாட்டை காதலிக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த நாட்டை எவ்வாறு கட்டி எழுப்புவது என்பது குறித்து ஒன்றாக இணைந்து சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி - உங்களிடம் இருப்பது புலியின் பணமா?
கந்தையா பாஸ்கரனின் பதில் - புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் புலிகளின் பணத்தைக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள் அல்ல. எங்களிடம் புலிகளின் பணம் இல்லை. புலிகளின் பணம் பற்றி பேசுவதற்கு எனக்கு அவசியமில்லை.
இந்தப் பணம் 20 ஆண்டுகள் கடின உழைப்பின் மூலம் ஈட்டப்பட்ட பணம், அந்தப் பணத்தைக் கொண்டு நிறுவனங்களை உருவாக்கி அதில் ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றேன்.
எமது சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எப்பொழுதும் சிந்திக்கின்றேன். உங்களினால் ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிந்தால் அடுத்த ஐந்து ஆண்டு காலம் காலத்திற்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் இந்த கட்டமைப்பை முன்னெடுத்த செல்ல வேண்டும்.
இதற்கு ஒரு திட்டஇலக்கு (Road map) ஒன்றை உருவாக்க வேண்டும் 20 ஆண்டு திட்டஇலக்கு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். நீங்கள் ஐந்து ஆண்டுகளுக்கு, அவர் ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது இவர் ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வந்தாலும் இந்த 20 ஆண்டு திட்டத்தின் கட்டமைப்பிற்குள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
20 ஆண்டு காலத்திற்குள் நாம் எங்கு இருக்க வேண்டும் என்ற ஒரு இலக்கு இருக்க வேண்டும். எங்களுடைய பொருளாதாரம் எந்த வளர்ச்சியில் இருக்க வேண்டும் என்று யார் வந்தாலும் எந்த அரசியல்வாதி வந்தாலும் எந்த ஜனாதிபதி வந்தாலும் அந்த பொருளாதார வளர்ச்சியில் பயணிக்க வேண்டும்.
இந்த நாட்டுக்கு லீ குவான் போன்ற ஒரு தலைவர் தேவை. இந்த நாட்டை மாற்றுவதற்கு அவ்வாறான ஒரு தலைவர் தேவை. 50 ஆண்டுகள் தேவையில்லை 20 ஆண்டுகள் போதுமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |