இலங்கையின் கடன் மீட்சிக்காக முழுமையான ஆதரவு வழங்கப்படும்: சீனா உறுதி
இரு தரப்பினருக்கும் பரஸ்பர நன்மை பயக்கும், மற்றும் இலங்கையின் கடனை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட விடயங்களுக்கு சீனாவின் உறுதிப்பாடு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த இலக்கை அடைவதற்கான, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்துக்கான சீனாவின் உறுதிப்பாட்டை அந்த நாட்டின் நிதி அமைச்சர் லியு குன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று(19.10.2023) பீய்ஜிங்கில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போதே சீன நிதி அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
நிதி வசதித் திட்டம்
இலங்கையின் நிதியமைச்சகம் கடந்த வாரம் சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியுடன் (எக்ஸிம் வங்கி சீனா) ஒரு மைல்கல் ஒப்பந்தத்தை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தது.
இது, இலங்கை தனது அனைத்து வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடனும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதற்கும் அதன் பாதையை தெளிவுபடுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் சர்வதேச நாணய நிதிய நிதி வசதித் திட்டத்தின் முதல் ஆய்வுக்கு உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தம் சுமார் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் நிலுவையில் உள்ள கடனை உள்ளடக்கியது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் சரியான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடனாளிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை
2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு இணையாக, கடந்த ஆண்டு செப்டெம்பரில், சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட அதன் கடனாளிகளுடன் இலங்கை பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது.
நிதி அமைச்சின் கூற்றுப்படி, 2023 மார்ச் மாத இறுதியில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் 36.4 பில்லியன் ரூபாய்கள் ஆகும்.
மேலும், 2023 மார்ச் மாத இறுதியில், இலங்கை, சீனாவுக்கு 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களும், இந்தியாவுக்கு 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களும், பாரிஸ் கிளப்பில் அங்கம் வகிக்கும் ஜப்பானுக்கு 2.68 பில்லியன் அமெரிக்க டொலர்களும் கடன்பட்டுள்ளது.
இதன்படி சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்நாட்டின் தொலைதொடர்பாடல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சினோபெக் நிறுவனம், பி.வை.டி. நிறுவனம் உள்ளிட்ட உயர்மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, இலங்கையின் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
துறைமுக நகரத்தை சர்வதேச நிதி மத்தியஸ்தானமாக மாற்றியமைத்தல், துறைமுக நகரத்திற்கான புதிய சட்டதிட்டங்களை உருவாக்குதல், துறைமுக நகரத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட நீதிமன்ற மற்றும் வழிக்காட்டல் முறைமைகளை உருவாக்குதல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் போக்குவரத்துக் கட்டமைப்பை மின்சாரத்தின் ஊடாக இயக்குதல், மின் வாகன பாகங்களை ஒழுங்கமைத்தல், மின்சார தொடருந்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
