வன்முறை அரசியல்வாதிகளே மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் : அனுர குற்றச்சாட்டு
காலிமுகத் திடல் போராட்டத்தின் பின்னர் பின்வாங்கிய ஊழல் மற்றும் வன்முறை அரசியல்வாதிகள், தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அரகலய போராட்டத்தின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால், உண்மையான நோக்கத்தைப் பேணுகின்ற அரசாங்கம், மக்கள் எழுச்சியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொது சமூக நோக்கம்
குருணாகலில் நடைபெற்ற கட்சியின் இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 2022 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாஷைகளை நிலைநிறுத்தக்கூடிய ஒரே அரசியல் சக்தியும், அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி மட்டுமே என்று கூறினார்.
அரசியல்வாதிகள் அரகலயவில் இருந்து பாடம் கற்கவில்லை என்றும், மாறாக போதைக்கு அடிமையானவர்களின் எழுச்சி எனக் கூறி, அந்த மக்களின் எழுச்சியை அவமானப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மக்கள், குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல் சக்திகளுடனும் பற்று கொள்ளாமல் பொதுவான அபிலாஷைகளுக்காக வீதியில் இறங்கியதாக திஸாநாயக்க குறிப்பிட்டார்.
அவர்கள், மோசடி மற்றும் ஊழல் இல்லாத ஒழுக்கமான, சட்டபூர்வமான நாட்டை மக்கள் எதிர்பார்த்தனர். பொது சமூக நோக்கத்திற்காகவே அவர்கள் வீதியில் இறங்கினர்.
அதை ஆட்சியாளர்கள் உணரவில்லை. அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கி அரச சொத்துக்களை விற்று, அதே பழைய பாதையிலேயே பயணிக்கிறார்கள் என்றும் அனுரகுமார தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |