இளைஞர் கடத்தல் விவகாரம்! ஹிருணிக்காவின் மேன்முறையீட்டு மனு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்வதற்காக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்துள்ளார்.
தீர்ப்பை பரிசீலித்த போது நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, மேன்முறையீட்டு மனு மேல் நடவடிக்கைக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு இன்று (11) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமனம்
இதற்கமைய, மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய முன்னிலையில் இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மேல்முறையீட்டை விசாரிப்பதற்காக, தலைமை நீதிபதி ரோகந்த அபேசூரிய, பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டை ஜனவரி 21 அன்று குறிப்பிட்ட அமர்வின் முன்பாக விசாரிக்கவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இளைஞர் கடத்தல்
2015 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி தெமட்டகொடை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த இளைஞர் ஒருவரை டிபெண்டர் ரக வாகனத்தைப் பயன்படுத்தி கடத்திச் சென்று, சட்டவிரோதமாக தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்ததுடன் அபராதமும் விதித்தது.
இதனையடுத்து, விதிக்கப்பட்ட தண்டனைகள் மற்றும் தீர்ப்பை ரத்து செய்து, தம்மை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யுமாறு கோரி ஹிருணிகா பிரேமச்சந்திர இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS