அதானி குழுமத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு : விளக்கமளித்த அமெரிக்கா
இந்தியாவின் தொழிலதிபரான அதானிக்கு எதிராக ஹிண்டன்பேர்க் ஆய்வு நிறுவனம் முன்வைத்த மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கும் இலங்கையிலுள்ள கொள்கலன் முனையத்தில் அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீடுகளுக்கும் தொடர்பில்லை என அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தத் தீர்மானமானது, இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதை மையமாக கொண்டது என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியாவின் அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பேர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை அடுத்து அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 100 பில்லியன் டொலர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கையின் கொள்கலன் முனையத்தில் அதானி நிறுவனம் மேற்கொண்டுள்ள 553 மில்லியன் டொலர் முதலீடு குறித்து டி.எப்.சி எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த விசாரணைகளின் முடிவில் குறித்த முதலீடானது மோசடி அல்லவென அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் அதிகாரியொருவர் புளூம்பேர்க்கிடம் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பேர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கள், இலங்கைத் திட்டத்திற்குத் தலைமை தாங்கும் துணை நிறுவனமான Adani Ports & Special Economic Zone Ltd நிறுவனத்திற்குப் பொருந்தாது என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
பாரிய உட்கட்டமைப்பு திட்டம்
நிதி முறைகேடுகள் அல்லது ஏனைய பொருத்தமற்ற நடத்தைகளை அமெரிக்க அரசாங்கம் ஆதரிக்காது என்பதை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்க நிறுவனம் இந்திய நிறுவனத்தை தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
சீனாவை விட வேறுபட்ட வகையில் உட்கட்டமைப்பு திட்டங்களை அமெரிக்கா அணுகுவது முக்கியமான ஒரு விடயமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவிலேயே அமெரிக்காவின் ஆதரவை பெற்ற மிகவும் பாரிய உட்கட்டமைப்பு திட்டமாக இலங்கை துறைமுகம் தொடர்பான அதானி நிறுவனத்தின் உடன்படிக்கை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின், பட்டுப்பாதை திட்ட முயற்சியின் கீழ் உலகளாவிய ரீதியில் உட்கட்டமைப்புக்களை கட்டியெழுப்புவரும் நிலையில், பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டிருந்தது.
இதேவேளை பங்கு விலைகளை கையாளுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை அதானி குழுமம் நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |