வருமானத்தில் மாத்திரம் குறியாக உள்ள மன்னார் நகரசபை: குற்றம் சுமத்தும் பொதுமக்கள்
மன்னார் நகர சபை தொடர்ச்சியாக வருமானத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்குவதாகவும், நகரத்தை சுத்தப் படுத்துவது, நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலோ அல்லது நகரசபைக்கு உற்பட்ட பின் தங்கிய கிராமங்களுக்கு வீதிகளை அமைப்பதிலோ அக்கறை செலுத்துவதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நகர சபையின் அண்மைக்கால செயற்பாடுகள் விரும்பத்தக்க வகையில் அமையவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மன்னார் நகரசபைக்கு உட்பட்ட பல இடங்களில் உரிய விதமாக குப்பைகள் அகற்றப்படாமல், வீதிகளில் கொட்டப் பட்டுள்ளதாகவும் வீதியில் கொட்டப்பட்ட குப்பைகள் நகரசபையினால் அள்ளப்படாமையினால் சிலர் வேறு வழி இன்றி முறையற்ற விதமாக குப்பைகளை எறியூட்டுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாழடைந்த நிலை
மறுபுறம் பல கிராமங்களில் வீதிகள் இல்லை எனவும் பல கிராமங்களில் நகர சபையால் சிறிது காலத்துக்கு முன் அமைக்கப்பட்ட வீதிகள் காணாமல் போயுள்ளதாகவும், பாழடைந்த நிலையில் மன்னார் மீன் சந்தை கட்டிடம், பராமரிப்பு இன்றி மன்னார் பேருந்து நிலையம் என்பன காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
நகரசபையினால் இது தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கையும் சீராக இடம் பெறுவதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் மன்னார் நகரசபை இவற்றில் கவனம் செலுத்தாமல் நகர சபைக்கு சொந்தமான காணிகளில் கடைத் தொகுதிகளை அமைத்து அவற்றை விற்று பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ளதாகவும், முன்னதாகவே மன்னார் நகர சபையினால் விற்பனை செய்யப்பட கடை தொகுதிகள் தொடர்பில் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்ற நிலையில் தொடர்ச்சியாக கடைகளை கட்டுவதிலேயே நகரசபை கவனம் செலுத்தி வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மன்னார் நகர சபையின் கீழ் கட்டப்பட்ட கடைகள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் சில கடைகள் பூரணப் படுத்தப்பட்டும் விற்பனை செய்யப்படாமல் காணப்படுகின்ற நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஒரு கடைத்தொகுதி கட்டுமானத்திற்கு மன்னார் நகரசபை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அடிப்படை பிரச்சினை
மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பல நிறைவேறாமல் காணப்படுகின்ற நிலையில் குறிப்பாக நகர சபைக்கு சொந்தமான இடங்களில் ஒழுங்கான குடிநீர் வசதி அல்லது தூய்மையான மலசல கூட வசதி , சிறுவர் பூங்கா, இல்லாத நிலையில் நகரசபைக்கு கிடைக்கும் வருமானகளில் அதிக அளவு தொகையை கடைத்தொகுதி கட்டுமானங்களுக்கு நகரசபை செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
நகர சபை எல்லைக்குள் முன்னிலைப்படுத்தி செய்ய வேண்டிய பல வேலைகள் காணப்படுகின்ற நிலையில் நகரசபையின் பணம் சேகரிக்கும் குறிக்கோள் தொடர்பில் மக்கள் பல்வேறு முறைப்பாடுகளை தெரிவிக்கின்றனர்.
எனினும், இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய உள்ளூராட்சி ஆணையாளர் இது தொடர்பில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.
எனவே மன்னார் நகரசபை மக்களிடம் இருந்து வரிகளை பெறுவதிலும் கடைத்தொகுதிகள் கட்டி விற்பனை செய்யும் செயற்பாட்டிலும் காட்டும் ஆர்வத்தை மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை உயர்த்துவது தொடர்பாக காட்ட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாவிட்டால் மக்களை திரட்டி எதிர்ப்பு வெளியிடும் நிலை ஏற்படும் எனவும் மக்களால் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |