மீண்டும் துபாய்க்கு சென்ற அலி சப்ரி ரஹீம்
இலங்கைக்கு தங்கத்தை கடத்தியதாக கூறப்பட்டு கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் துபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று (27.05.2023) இரவு 8 மணியளவில் எம்பி ஃப்ளை துபாய் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது, எனினும் அவரின் பயண நோக்கம் தெரியவரவில்லை.
பொருட்கள் பறிமுதல்
கடந்த செவ்வாய்க்கிழமை (23.05.2023) ஃப்ளை துபாய் விமானத்தில் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய அவர், பிரமுகர் ஓய்வு அறையில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்போது 3.5 கிலோ தங்கத்துடன் 91 ஸ்மார்ட் கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டன.
பின்னர் அதே நாளில், நாடாளுமன்ற உறுப்பினர் 7.5 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதேநேரம் அவர் கடத்தி வந்ததாக கூறப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கும் யோசனையை நாடாளுமன்றில் முன்வைக்க நேற்று அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர். இந்தநிலையிலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |