அமெரிக்க - ஈரான் போரினால் சர்வதேச விமானச் சேவைகள் பாதிப்பு
ஈரான் மீதான போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக சர்வதேச அளவில் விமான எரிபொருள் விலை 80 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
இதன் நேரடி விளைவாக, உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் தங்களது பயணக் கட்டணங்களை அதிகரித்துள்ளதோடு, இலட்சக்கணக்கான விமான இருக்கைகளையும் இரத்து செய்து வருகின்றன.
ஜூன் முதல் செப்டெம்பர் வரையிலான கோடைக்கால சுற்றுலாப் பருவத்தில் மட்டும் சுமார் 93 இலட்சம் இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, எரிபொருள் செலவை ஈடுகட்ட முடியாமல் அமெரிக்காவின் 'ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்' தனது சேவையை நிரந்தரமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளதமை உலக விமானப் போக்குவரத்துத் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சராசரி கட்டணம்
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தப் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் மற்றும் எட்டிஹாட் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது சேவைகளை பெருமளவில் குறைத்துள்ளன.

ஐரோப்பா மற்றும் ஆசியா இடையிலான சில வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவிலிருந்து சர்வதேசப் பயணங்களுக்கான சராசரி கட்டணம் கடந்த ஆண்டை விட 16 சதவீதம் உயர்ந்துள்ளது. கட்டண உயர்வு ஒருபுறம் இருந்தாலும், கடைசி நேர இரத்துகளைத் தவிர்க்கப் பயணிகள் முன்கூட்டியே அதிக விலை கொடுத்து பயணப் பதிவுகளைச் செய்து வருகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வந்தாலும், எரிசக்தி விநியோகம் சீரடைய குறைந்தது ஓராண்டு காலம் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விமானத் துறை இயல்பு நிலைக்குத் திரும்புவதில் நீண்ட தாமதம் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் அதிகளவில் சேவைகளை இரத்து செய்வதால், பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை உறுதிப்படுத்த முழுச் சேவை வழங்கும் விமான நிறுவனங்களை நாடத் தொடங்கியுள்ளனர்.
உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு வரும் வாரங்களில் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் விமானச் சேவைகள் முற்றிலுமாக முடங்கும் அபாயமும் நிலவுகிறது.