ஈரான் போர் எதிரொலி: ஐரோப்பிய நாடுகளுக்கான விமானக் கட்டணங்கள் உயர வாய்ப்பு
ஈரான் போர் காரணமாக விமான எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஐரோப்பிய விமானக் கட்டணங்கள் அதிகரிப்பது இனி தவிர்க்க முடியாத ஒன்று என சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தலைவர் வில்லி வோல்ஷ் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என்றும், குறிப்பாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேவை அதிகரிக்கும் போது இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சில நிறுவனங்கள் பயணிகளை ஈர்க்கக் கட்டணச் சலுகைகளை வழங்கினாலும், எரிபொருள் செலவை ஈடுகட்ட நீண்ட கால அடிப்படையில் கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என அவர் விளக்கியுள்ளார்.
விலை உயர்வு
ஒருவேளை ஹோர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்பட்டாலும், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் எரிபொருள் விலை குறைவதற்குப் பல மாதங்கள் ஆகும் என்பதால், இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

இருப்பினும், தற்போதைக்கு விமானப் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க மாற்று எரிபொருள் விநியோகங்களை நாடுகள் ஆலோசித்து வருகின்றன.