திருகோணமலையில் விவசாயிகளுக்கு காற்றழுத்த துப்பாக்கிகள் வழங்கி வைப்பு
திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை காலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக விவசாயிகளுக்கு காற்றழுத்த துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று(12) இந்த நிகழ்வு நடைபெற்றது.
துப்பாக்கிகள் வழங்கி வைப்பு
இதன்போது, 2025 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் கீழ், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 8,032,500.00 பெறுமதியான துப்பாக்கிகள், காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ள 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள விவசாய சங்கங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பட்டினமும் சூழலும், குச்சவெளி, தம்பலகாமம், கோமரங்கடவல, சேருவில மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகங்களுக்குமாக 153 காற்றழுத்த துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
பயிற்சி
மேலும் துப்பாக்கிகளை இயக்குவது குறித்த, பயிற்சியும் பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் என். கோவிந்தராஜன், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகளும் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












