அவதானமாக இருங்கள்.. வைரஸ் தொற்று குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் குளிர் மற்றும் வரண்ட வானிலை காரணமாக வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் காணப்படுமாயின் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மருத்துவமனையின் சிரேஷ்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் ரவீந்திர உடகமகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியரை நாடுங்கள்..
இந்தக் காலப்பகுதியில், சிறுவர்கள் மத்தியில் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பதாகவும் மருத்துவ அதிகாரி மருத்துவர் ரவீந்திர உடகமகே குறிப்பிட்டார்.

இதனிடையே, நாட்டில், பல பகுதிகளில் வளி தரச்சுட்டெண் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்று காலை இற்றைப்படுத்தப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்தநிலைமை மாறிவிடும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.