தமிழர்களின் பண்பாடு சிதைக்கப்படுவதாக பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு(Photos)
தமிழ் மக்களின் பண்பாடு சிதைக்கப்பட்டு அதன் தனித்துவத்தை இழந்துகொண்டிருக்கின்றது. பண்பாட்டை உள்வாங்காமல் தேசியம் முழுமைபெறாது. அது உள்ளீடற்ற கொழுக்கட்டை போன்றது என்று தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினால் ஆடிப்பிறப்பு விழா நேற்று(17) உரும்பிராய் கிழக்கு பாரதிதாசன் சனசமூகநிலைய முன்றலில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அவல நிலை
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆடிப்பிறப்பு தமிழ் மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகின்ற ஒரு பண்டிகையாகும். பன்மைத்துவம் மிக்க ஆரோக்கிய உணவை கூடி பகிர்ந்துண்ணும் உணவு பண்பாட்டை எடுத்தியம்புகின்ற ஆடிப்பிறப்புக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கிய காலமும் ஒன்றிருந்தது.
ஆனால், இன்று விடுமுறை மாத்திரம் இல்லாமல் போகவில்லை. தமிழ் மக்களின் வாழ்வியலில் ஆடிப்பிறப்பும் அது சார்ந்த கொண்டாட்டங்களும் கூட இல்லாமல் போய் கொண்டிருக்கின்றன.
இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரான தமிழர் அரசியலில் விடுதலை புலிகளின் காலத்திலேயே தமிழ் இனத்தின் பண்பாடு குறித்தும் கலை இலக்கியங்கள் குறித்தும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கென கலை பண்பாட்டு கழகம் என்று தனியான ஒரு அலகே உருவாக்கப்பட்டது. போராளிகளிடம் மாத்திரமல்லாமல் தமிழ் பண்பாடு குறித்த உணர்வுபூர்வமான விம்பம் மக்களிடமும் ஏற்படுத்தப்பட்டது.
பண்பாட்டை சிதைப்பதற்கு முயற்சி
ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தம் எல்லாவற்றையும் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. தேசியம் என்பது அரசியல்வாதிகளிடமல்ல. அது மக்களிடம்தான் உள்ளது.
ஓர் இனத்தை மற்றைய இனங்களிடமிருந்து வேறுபிரித்து காட்டும் தனித்துவமான வாழ்வியல் முறைமையே தேசியமாகும். இதனாலேயே ஓர் இனத்தை அழிக்க நினைப்பவர்கள் தேசியத்தின் வேர்களில் ஒன்றான பண்பாட்டை சிதைப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
ஆனால், பண்பாட்டு சிதைவு மக்களாலேயோ அல்லது அரசியல் வாதிகளாலேயோ கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. இந்நிலை மாறவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரேணுகா அன்ரன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், கலை இலக்கிய அணியின் துணை செயலாளர் கை. சரவணன் ஆகியோருடன் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. சண்முகலிங்கன் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



