பொதுமக்களுக்கு விரைவான நீதி : நீதிமன்றக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இலக்கு - அநுர தெரிவிப்பு
பொதுமக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் நீதிமன்றக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதே நோக்கமாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த கலந்துரையாடல் நேற்று(04.08.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் உள்ள பிரதான திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் பௌதிக மற்றும் நிதியியல் முன்னேற்றம் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகம், நீதி அமைச்சுக் கட்டிடம், புதுக்கடை நீதிமன்ற வளாகம், காலி, மாத்தளை, கந்தளாய் உட்பட புதிய நீதிமன்ற வளாகங்களின் நிர்மாணப் பணிகள் குறித்த முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டன.
மேலும், 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் காரணமாக இடையில் நிறுத்தப்பட்ட நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் நிர்மாணிக்கும் திட்டம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் கீழ் 79 மில்லியன் மூலதனச் செலவுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றம், சட்டவரைஞர் திணைக்களத்தின் கீழ் 38 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றமும் இங்கு ஆராயப்பட்டன.
ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்ப்பது
தற்போது முக்கிய பங்கு வகிக்கும் சட்டவரைஞர் திணைக்களத்துக்குத் தேவையான மனித வள அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதன் ஊடாக அதன் செயல்திறனை அதிகரிப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்குத் தேவையான ஆய்வுகூட வசதிகளை வழங்குவதற்குரிய உபகரணங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் கிடைக்கப்பெறும் எனவும் இங்கு குறிப்பிடப்பட்டதுடன், மாதமொன்றுக்குப் பெற்றுக்கொள்ளப்படும் பகுப்பாய்வு அறிக்கைகளின் அளவை 9 ஆயிரம் வரை அதிகரித்துக் கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தைப் பொருத்தமான இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட பிரிவினருக்குப் பணிப்புரை விடுத்தார்.
மேலும், பொறியியல் துறையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களைச் சேர்ப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
கொள்முதல் செயன்முறை குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அதில் காணப்படும் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே டிஜிட்டல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்குத் தனித்தனி கொள்முதல் செயன்முறையைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

