யாழில் கட்டுப்பணம் செலுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி
உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ் மாவட்டத்தின் 17 சபைகளிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
கட்டுப்பணம்
இந்தநிலையில், இதற்கான கட்டுப்பணத்தை கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) யாழ் தேர்தல் திணைக்களத்தில் இன்று (12) காலை செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் யாழிலுள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான இந்தக் கட்சிக்கு எமது மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்போடு தேர்தல் பணிகளை ஆரம்பித்து இருக்கிறோம்.
எங்களுடைய கட்சி இன்றைக்கு யாழில் கட்டுப் பணம் செலுத்தி இருந்தாலும் தொடர்ந்து வடக்கு கிழக்கு முழுவதும் கட்டுப்பணம் செலுத்தி வேட்புமனுக்களையும் தாக்கல் செய்ய உள்ளது.
எங்களது கட்சியின் தலைவருடன் பல தரப்பினரும் பேச்சுக்களை நடாத்தி வருகின்றனர். இந்த பேச்சு முயற்சிகளில் எங்களது நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக கூறி வருகின்றோம்.
பேச்சுக்கள்
குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட வேண்டும், நல்லாட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி வரைபு நிராகரிக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம் ஆகியவற்றோடு உடன்படக் கூடிய தரப்புகளோடு ஒன்றிணைந்து பயணிக்க கூடியதான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பேச்சு வார்த்தைகளில் ஒரு முன்னேற்றம் ஏற்படும் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்த தரப்புக்களோடு முழுமையான ஒரு இணக்கம் ஏற்பட்ட பின்னர் யார் யார் என்ற அந்த விபரங்களை அறிவிப்போம். அவ்வாறு ஒரு புதிய கூட்டு அமைந்தாலும் எங்களுடைய சைக்கிள் சின்னத்தில் தான் வடக்கு கிழக்கில் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் எம்முடன் இதுவரையில் பேசிய தரப்புக்கள் எமது இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
எனினும் பேச்சுக்கள் தொடர்வதால் முழுவிபரங்களையும் இப்போதைக்கு எம்மால் கூற முடியாவிட்டாலும் விரைவில் இந்தக் கூட்டு தொடர்பில் கட்சியின் தலைவர் அறிவிப்பார் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
