கட்டுக்கடங்காத உழவுக் கூலி! பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்
மூதூர் கிழக்கில் இம்முறை பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உழவு வேலைகளை ஆரம்பிப்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான எரிபொருளை கமநல சேவைகள் திணைக்களத்தின் சிபாரிசுடன் விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உழவுக்கான கூலி
இருப்பினும் உழவு இயந்திர உரிமையாளர்கள் ஒரு ஏக்கருக்கு மூன்று உழவுக்கான கூலியான இருபதாயிரம் ரூபா விலை நிர்ணயம் செய்துள்ளமையால், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கான செய்கையின் முடிவில் 32,000 ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் விவசாயிகளினதும், விவசாய சம்மேளனங்களினதும், கோரிக்கைக்கு அமைய பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி விலைக் குறைப்பை மேற்கொள்வதற்கு நேற்று (20.09.2022) எடுத்த முயற்சி உழவு இயந்திர உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பினால் இணக்கப்பாடுகள் இன்றி முடிவுக்கு வந்துள்ளது.
விவசாயிகள் கவலை
உழவு இயந்திர உபகரணங்களின் விலைகள் அதிகரித்தாலும் ஒரு ஏக்கருக்கான உழவுக் கூலியாக 8000 ரூபா வழங்குவது கூட அதிகபட்ச தொகை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாத வகையில் விவசாய செய்கையில் ஈடுபட வழிமுறைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் இல்லையெனின் தாம் விவசாயத்திலிருந்து ஒதுங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.