உரோம் சட்டத்தின் கீழ் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் : ருத்திரகுமாரன்
உரோம் சட்டத்தின் கீழ் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையின் பொறுப்புக்கூறலுக்கு வழியேற்படுத்த முடியும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐசீசீ என்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றிடம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை உரோம் சட்டத்துக்கு உள்வாங்கப்படாமை காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வரம்புகளுக்கு அது உட்படவில்லை என்று கூறப்படுகிறது.
மனித உரிமைகள் பேரவை
முன்னதாக இலங்கையை உரோம் சட்ட வரம்புகளுக்குள் கொண்டு வரவேண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹசைன் ஏற்கனவே கோரியிருந்தார்.
எனினும் அதனை இலங்கை அரசாங்கம் கருத்திற்கொள்ளவில்லை. எனவே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உரோம் சட்டத்துக்குள் அங்கீகரிப்பதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த இனப்படுகொலைகளுக்கு தீர்வை காணமுடியும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மனிதகுலத்திற்கும் போர்க்குற்றங்களுக்கும் எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் மற்றும் ஹமாஸுக்கும் எதிராக கைது பிடியாணைகளை பிறப்பிக்கும் முயற்சிகளை, எடுத்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் வழக்கு தொடுனர் கரீம் கானின் நடவடிக்கைகளை வரவேற்கும் வகையில் விசுவநாதன் ருத்திரகுமாரன் இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தளபதியோ, அரசியல்வாதியோ எவரும் சர்வதேச சட்டத்துக்கு அப்பாற்பட்டு செயற்படமுடியாது.
குற்றவியல் நீதிமன்ற வழக்கு
இந்தநிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கு தொடுனரின் செயற்பாடுகள், இலங்கை விடயத்தில் நேரடியாக முரண்படுகிறன.
இதன்படி தமிழ் மக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட தளபதியோ, அரசியல்வாதியோ எவரும் கைது செய்யப்படவில்லை.
ஈழத்தமிழர்களுக்கு எதிரான கடுமையான சர்வதேச குற்றங்களை மேற்கொண்ட, இலங்கை, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச சட்டத்தை தவிர்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமை சோகமான உண்மையாகும்.
2012இல் ஐக்கிய நாடுகளின் மறுஆய்வு அறிக்கையின்படி, இலங்கையில் ஆயுத மோதலின் இறுதி கட்டங்களில் 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் காலஞ்சென்ற மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் தகவல்படி இறுதி மோதலில் 146,679 பேர் கொல்லப்பட்டனர்.
எதிரான சம்பவங்கள்
இந்தநிலையில் பாலஸ்தீனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வரம்புக்குள் உள்வாங்கப்படவில்லை என்று இஸ்ரேல் கூறினாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை தமது வரம்புக்குள் அங்கீகரித்துள்ளது.
இதேவேளை 2022 செப்டம்பர் 15 அன்று, உரோம் சட்டத்துக்குள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உள்வாங்கவேண்டும் என்றுக் கோரி, நீதிமன்றின் பதிவாளருக்கு அறிவித்திருந்தோம்.
பாலஸ்தீனத்தை அதிகார வரம்புக்குள் ஏற்றுக்கொண்ட வாதத்தின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தமது அதிகார வரம்புக்குள் அங்கீகரிக்கவேண்டும்.
இதன் மூலமே தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை நிறுவமுடியும் என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |