யாழ். ஊரெழு விபத்தில் படுகாயமடைந்த விமானப்படைச் சிப்பாய் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒருவர் பேருந்து விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஏ.எம்.என் குணசேகரா (வயது 33) என்னும் வெலிமடையைச் சேர்ந்த விமானப் படைச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
விடுமுறையில் கண்டிக்குச் சென்ற படையினரை கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு கடமைக்கு ஏற்றிவந்த பேருந்தில் சாரதி அருகே இருந்த கம்பியில் குறித்த விமானப்படைச் சிப்பாய் சாய்ந்து நின்றுள்ளார்.
இதன்போது ஊரெழுப் பகுதியில் நாய் ஒன்று திடீரெனக் குறுக்கே சென்றதால் சாரதி சடுதியாகப் தடுப்பினை (Break) பிரயோகித்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் விமானப்படைச் சிப்பாய் தூக்கி வீதியில் வீசப்பட்டுள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் படுகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார்
மேற்கொண்டுள்ளார்.