ஐக்கிய அரபு அமீரகம் ஜனாதிபதி அநுரவிற்கு வழங்கியுள்ள உறுதிமொழி
புதிய அரசாங்கத்தின் திட்டங்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவோம் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் தலைமையிலான குழுவினர் இன்று (22) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு முதலீடு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அநுரவின் முயற்சிகள்
இலங்கையின் மறுகட்டமைப்புத் திட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான ஜனாதிபதி அநுரவின் முயற்சிகள், அர்ப்பணிப்பு மற்றும் நேர்மறையான அணுகுமுறையையும் துணைப் பிரதமர் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையில் முதலீட்டிற்கு சாதகமான சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போல முதலீட்டை ஊக்கப்படுத்தாத சூழல் மீண்டும் ஏற்பட அனுமதிக்கப்படாது என்றும், முதலீடுகளைப் பாதுகாக்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுலா தலம்
நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு விளக்கினார்.
மேலும், துறைமுக முனைய மேம்பாடு, துறைமுக நகர மேம்பாடு, சுற்றுலா, எரிசக்தி துறை மற்றும் போக்குவரத்துத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.
இலங்கையை பிராந்தியத்தில் சிறந்த முதலீட்டு மையமாகவும் சுற்றுலா தலமாகவும் மாற்றுவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |