செங்கடலைப் பாதுகாக்க இலங்கைக் கடற்படைக் கப்பல்: கடற்றொழில் அமைப்பு சம்மேளனம் குற்றச்சாட்டு
இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசு செங்கடலைப் பாதுகாக்க இலங்கைக் கடற்படைக் கப்பலை அனுப்புகின்றது என யாழ்ப்பாணம் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளன செயலாளர் அன்ரன் செபராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (13.01.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இலங்கை கடற்படை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளால் கடல் வளங்கள் அழிக்கப்படுகின்றன. இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்தும் அழிக்கப்படுகின்றது. இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இலங்கை அரசு செங்கடலைப் பாதுகாக்க இலங்கைக் கடற்படைக் கப்பலை அனுப்புகின்றது.
இலங்கைக்குப் பொருட்கள் கொண்டுவரப்படும் கடலைப் பாதுகாக்க வேண்டியது முக்கியம்தான். எனினும், மக்களின் வாழ்வாதாரத்தையும் இலங்கை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.
இந்தியத் துணைத் தூதரகம்
இங்கிருக்கக் கூடிய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி இந்தியத் துணைத் தூதரகம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்திய தூதரக அதிகாரிகள் எமது பிரச்சினைகளை இந்திய அரசிடம் எடுத்துச் சொல்லி இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
இல்லையேல் விரைவில் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்வோம். இந்திய இழுவைப் படகுகள் மீனவர்களின் வலைகளை அழிக்கின்றன.
இதனால் ஒருவேளை உணவுகூட இல்லாமல் கடற்றொழிலாளர்கள் பலர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்குக் கடற்றொழில் அமைச்சர் அல்லது இலங்கை அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |