மன்னாரில் சிறுவன் ஒருவர் அதிரடியாக கைது
மன்னார் - சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து புகைப் படங்களையும் காணொளிகளையும் எடுக்க உதவும் கருவியான ட்ரோன் கேமராவை அனுமதியின்றி பறக்க விட்ட சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(09.08.2026) இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சிறுவன்
பாதுகாப்பு அமைச்சினால் பதிவு செய்யப்படாத ட்ரோன் ஒன்றை அனுமதியின்றி பறக்க விட்டதாக கூறப்படும் 16 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே மன்னார் - சௌத்பார், பனங்கட்டுகொட்டு பகுதியில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் சிறுவனிடமிருந்து DJI Mini 4 Pro ரகத்தைச் சேர்ந்த ஒரு ட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.