ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு அழுத்தம்..!
ஈரானுடனான போரின் காரணமாக ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளின் கையிருப்பு பெருமளவில் குறைந்துள்ள நிலையில், ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகன் அந்நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
ஈரானிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட 'பேட்ரியட்' மற்றும் 'தாட்' ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பு பாதியளவிற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக சர்வதேச வியூக ஆய்வுகளுக்கான மையம் (CSIS) சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயுதக் கையிருப்பு குறைவு
இந்நிலைமை தொடர்ந்தால் அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆயுத உற்பத்தியை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கான திட்டங்களை 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பென்டகனின் பிரதி பாதுகாப்புச் செயலாளர் ஸ்டீவ் ஃபீன்பெர்க் பாதுகாப்புத் துறை நிறுவனங்களுக்கு அவசர அறிவித்தல் விடுத்துள்ளார்.

வருடக் கணக்கில் நீடிக்கும் ஆயுத அபிவிருத்தி திட்டங்களை ஏற்க முடியாது எனவும், உற்பத்தி திறனை உடனடியாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அவசர நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பென்டகன் பேச்சாளர் சீன் பார்னெல் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை, போர்க் காலத்தில் ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை நிராகரித்துள்ள அமெரிக்கக் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிடம் போதியளவு ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், புதிய உற்பத்திகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.