பாம்பன் கடற்தொழிலாளர் வலையில் சிக்கிய 350 கிலோகிராம் எடை கொண்ட மூன்று மஞ்சள் வால் கேரை மீன்கள்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு கடற்தொழிலாளர் வலையில் 350 கிலோகிராம் எடை கொண்ட மூன்று மஞ்சள் வால் கேரை மீன் சிக்கியதால் பாம்பன் கடற்தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 50க்கும் அதிகமான நாட்டுப்படகுகள் நூற்றுக்கணக்கான கடற்தொழிலாளர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றிருந்தனர்.
கடற்தொழிலாளர்கள் மீன் பிடித்து விட்டு இன்று (13.10.2026) காலை பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர்.
அதிக மீன் வரத்து
வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் கடல் வழக்கத்திற்கு மாறாக சற்று சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் கடல் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மீன் பிடித்து கரை திரும்பிய கடற்தொழிலாளர்கள் வலையில் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படும் நகரை, பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் அதே போல் கிளாத்தி, சீலா, மாவுலா, கிளி, பாறை, முண்டகண்ணி பாறை, கட்டா, சூவாரை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் வரத்து எதிர்பார்த்த அளவை விட அதிகளவு கிடைத்ததால் கடற்தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மரிய டெலிசன் என்பவருக்கு சேர்ந்த நாட்டு படகில் சுமார் 3 மீட்டர் நீளம் கொண்ட 350 கிலோகிராம் எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீன் என்றழைக்கப்படும்; அம்பர்ஜாக் மீன்கள் மூன்று சிக்கியுள்ளன.
பாம்பன் நாட்டுப்படகு கடற்தொழிலாளர் வலையில் சிக்கிய 350 கிலோகிராம் எடை கொண்ட மஞ்சள் வால் கேரை மீனை கேரளா மீன் வியாபாரி ஒருவர் கிலோகிராம் ரூ.180 என ரூபாய் 63000க்கு கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




