திருகோணமலையில் 8 மாடி இருதய சிகிச்சை வளாகம்!
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்புடன் இன்று (16) நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட மக்களுக்கு நவீன மற்றும் தரமான இருதய சிகிச்சை சேவைகளை மாவட்டத்திலேயே பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தப் புதிய இருதய சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இருதய சிகிச்சை சேவை
சுமார் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த 8 மாடிக் கட்டிடத் தொகுதியில், இருதய நோய்களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும் அவசரகால மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்குவதற்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய, தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICU), கெத் லேப் (Cath Lab), ஆய்வகங்கள், எக்ஸ்-ரே சேவைகள், நூலகம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த வளாகத்தில் அமைக்கப்படவுள்ளன. கிழக்கு மாகாணத்தின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், பிராந்திய மட்டத்தில் இருதய சிகிச்சை மற்றும் அவசர மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் மூலம் திருகோணமலை மாவட்டம் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் தூரப் பிரதேசங்களில் வாழும் மக்களும் தமது சொந்தப் பிரதேசத்திற்கு அண்மையிலேயே உயர்தர இருதய சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.