யாழ்.மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் - மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை விமான படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73,000 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று(06) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய யாழ்ப்பாணம் - மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே வடக்கு ஆளுநர் மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.
காணிகளை விடுவிக்க நடவடிக்கை
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“205 வருடகால வரலாற்றை கொண்ட யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான 2.5 பர்சஸ் காணி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும், விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படவில்லை எனவும் பாடசாலையின் அதிபர் இதன்போது கூறினார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இதேவேளை ஏனைய உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பில் எழுத்து மூலம் கோரிக்கைகளை சமர்பிக்க வேண்டும்.
எதிர்வரும் ஆண்டுக்குள் இலங்கையில் அனைத்து காணி அற்றவர்களுக்கு காணிகளும் வீடுகளும் வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அத்துடன் படிப்படியாக பொதுமக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படுவதுடன் வனவிலங்கு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் காணியற்ற மக்களுக்கு வழங்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில், இலங்கை விமானப்படையின் வான்வெளிப் பொறியியல் துறையின்
பணிப்பாளர் நாயகம் ஏயார் வைஸ் மார்சல் முதித்த மஹவத்தகே, திட்ட இணைப்பாளர்
குரூப் கப்டன் துஷார பண்டார, இலங்கை விமானப் படையின் பலாலி படைத்தளத்தின்
கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் , இலங்கை விமான படையின்
அதிகாரிகள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,
கல்வி துறைசார் அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும்
கலந்துக்கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |