இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் 50 இலட்சம் மதிப்பிலான 450 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட தனிப்பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்த கடல் அட்டைகள் அடங்கிய மூட்டைகளை மண்டபம் வனத்துறை அதிகாரியிடம் நேற்று (17.12.2024) ஒப்படைத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், மண்டபம் வேதாளை, மரைக்காயர் பட்டினம், களிமண்குண்டு, குந்துகால் உள்ளிட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், பீடி இலை பண்டல்கள், கஞ்சா, மெத்த பெட்டன் உள்ளிட்ட பொருட்கள் கடல் வழியாக நாட்டுப்படகில் கடத்தப்பட்டு வருகின்றன.
வழக்கு பதிவு
இந்நிலையில் நேற்று(17) அதிகாலை இராமநாதபுரம் மாவட்ட தனிப்பிரிவு பொலிஸாருக்கு மண்டபம் அடுத்த வேதாளை தெற்கு தெருவில் உள்ள வீட்டில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் தனிப்பிரிவு பொலிஸார் குறித்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் பின்புறம் சாக்கு மூட்டைகளில் பதப்படுத்தப்பட்ட சுமார் 450 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கடல் அட்டைகளை பறிமுதல் செய்த தனி பிரிவு பொலிஸார், வீட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |