யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவு
தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வு. இது இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துள்ளது.
உலகில் எங்கும் காணக்கிடைக்காத பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், வரலாற்று ஆவணங்கள், நூல்கள், 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என பல பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்ததது.
மாவட்ட சபைத் தேர்தல்
1981 ஜூன் 04ஆம் திகதி இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வேளை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர்.
1981 மே 31ஆம் திகதியன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்த வேளை, மர்ம நபர்களால் அங்கு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
இதில் வெடித்த வன்முறையால், யாழ்ப்பாணத்தின் பல வணிக நிறுவனங்கள், கடைகள், பத்திரிகை அலுவலகம் போன்றவை கொளுத்தப்பட்டன.
நினைவேந்தல்
இதன்போதுதான் பல வரலாற்றுப் பொக்கிஷங்களின் இருப்பிடமான யாழ்ப்பாண நூலகமும் எரிந்து சாம்பலாகியது.இது நடைபெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துள்ளது.
இதனை நினைவு கூரும் நினைவேந்தல் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வில் யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகர் ,நூலக ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நூலக எரிக்கப்பட்டபோதும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகளின்போதும் உயிரிழந்தவர்களுக்காக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |