குஜராத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் : விசாரணை தொடர்பில் வெளியான தகவல்
குஜராத் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அணியால் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூறப்பட்ட 4 இலங்கையர்களும்,தீவிர விசாரணைக்காக வெளியிடப்படாத இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணைகளின் மூலம் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று இந்திய என்ஐஏ பொலிஸ் தெரிவித்துள்ளது.
அவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.
முகமது நுஸ்ரத், முகமது நுஃப்ரான், முகமது ஃபரிஸ் மற்றும் முகமது ரஸ்டின் ஆகியோரே கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தியாவுக்கு செல்ல 4 இலட்சம்
ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தால் முற்றிலுமாக தீவிரமயமாக்கப்பட்டு, பயங்கரவாத தாக்குதலை நடத்த இந்தியாவுக்கு வர அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது
முன்கூட்டியே கிடைத்த தகவல்களின்படி, அவர்கள் மே 18 அல்லது 19 அன்று அகமதாபாத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது,
இதன்படி அவர்கள் நேற்று இரவு கொழும்பில் இருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து அஹமதாபாத்துக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இந்தியாவுக்கு செல்ல 4 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவில் தாக்குதல்களுக்காக அவர்கள், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அபு என்பவருடன் சமூக ஊடகங்களின் ஊடாக கடந்த பெப்ரவரி முதல் தொடர்புகளை பேணி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.