கொழும்பில் அதிரடி சுற்றிவளைப்பு - 4 உணவுப்பொருட்கள் தொடர்பான களஞ்சியசாலைகளுக்கு சீல்
கொழும்பு, நுகேகொடையில் அமைந்துள்ள முன்னணி விநியோகஸ்தர் ஒருவருக்கு சொந்தமான 04 உணவுப் பொருள் களஞ்சியசாலைகள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று முன்தினம் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்களின் உற்பத்தித் திகதி மற்றும் காலாவதியாகும் திகதி குறிப்பிடப்படாமல், நாட்டின் முன்னணி ஹோட்டல்கள், நிறுவனங்கள் மற்றும் சந்தைகளுக்கு மொத்தமாக உணவுப் பொருட்களை விநியோகம் செய்த களஞ்சியசாலைகளே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு பல தயாரிப்புகளில் இறக்குமதியாளர் பற்றிய எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படாமை உட்பட பல நுகர்வோர் சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது.
களஞ்சியசாலை வளாகத்திற்கு சீல்
இதன் காரணமாக, இந்த களஞ்சியசாலை வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

பொருட்களின் பொதிகளில் உள்ள உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்கள் எதையும் உள்ளடக்காமல், அந்தப் பொருட்களை வேறு பக்கட்களில் அடைக்கும் செயல்முறை இந்த இடத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இது தவிர, ஹோட்டல்கள் மற்றும் சந்தைகளுக்கு விநியோகிப்பதற்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான பெருமளவிலான உணவுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
உணவு உற்பத்தி
சீஸ், பட்டர் உள்ளிட்ட பால் பொருட்கள், சொக்லேட், கொக்கோ தூள், டின்னில் அடைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள், பாஸ்தா, இறைச்சி வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் பல மூலப்பொருட்கள் இந்த பொருட்களுள் அடங்குகின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதற்கு தொடர்புடைய வர்த்தக நிறுவனம் மற்றும் சந்தேகநபர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது, பொருட்களின் லேபிள், உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி மற்றும் இறக்குமதியாளரின் தகவல்கள் குறித்து தீவிர அவதானம் செலுத்துமாறு பொதுமக்களிடமும், உணவு உற்பத்தி நிறுவனங்களிடமும், அதேபோல் ஹோட்டல் உரிமையாளர்களிடமும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri