கடலுக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி - சடலமாக கரையொதுங்கிய நால்வர்
கம்பஹா - ஜாஎல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலமானது நேற்றைய தினம்(01.09.2026) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்
இதன் மூலம் கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயார் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் உட்பட 4 பேர் பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் காலை மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதலில் 35 வயதுடைய தாய் மற்றும் 4 வயது, 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த 13 வயது சிறுவனின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்ததிலிருந்து பொலிஸாரும், கடற்படையினரும், அந்தப் பகுதி கடலோர மீட்புக் குழுவினரும் இணைந்து எபமுல்ல கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டே அனைத்துச் சடலங்களையும் மீட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் கடலில் நீராடும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.