அக்கரைப்பற்று முன்னாள் மேயர் அதாஉல்லாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது நேற்று(01.09.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
கடந்த 19ஆம் திகதி சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை செப்டம்பர் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையிலேயே, அவரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தேகநபரான சக்கி அதாஉல்லா சுகயீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதனால், அவர் இன்று நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையிலேயே, சிறைச்சாலை அதிகாரிகளின் அறிக்கைகளை பரிசீலித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வராகச் சக்கி அதாஉல்லா பதவி வகித்த காலத்தில், அங்கு கடமையாற்றிய பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவரைப் பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வழக்கு பதிவு
குறித்த பெண் சமூக வலைத்தள (Facebook Live) நேரலையினூடாக இந்தக் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதை அடுத்து, அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அம்பாறை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் கடந்த மாதம் 18 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்போது சந்தேகநபரை ஓகஸ்ட் 19 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னர் ஓகஸ்ட் 19 ஆம் திகதி மீண்டும் முன்னலைப்படுத்தப்பட்ட போது, விளக்கமறியல் செப்டம்பர் 01 வரை நீடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3ஆவது முறையாக செப்டம்பர் 09 வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.