மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் 4 பேர் கைது
காத்தான்குடி, ஏறாவூர், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரிவுகளில் போதைப் பொருட்களுடன் நான்கு வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(10) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவ தினமான நேற்று இரவு 10.00 மணியளவில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் பகுதியில் வியாபாரத்துக்கு என போதை பொருளை எடுத்துச் சென்ற 33 வயதுடைய ஒருவரை 10 கிராம் 150 மில்லி கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கைது
அதேவேளை, ஏறாவூர் பிரதேசத்தில் 15 கிராம் 660 மில்லி கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவரை கைது செய்தனர்.
மட்டக்களப்பு- மங்களராம விகாரையில் தங்கியிருந்து கல்லடி பாலத்துக்கு அருகில் கடலை வண்டிலில் கடலை வியாபாரம் செய்து வந்த கடுகன்னாவை சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவரை 140 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இவ்வாறு கடந்த 4 வருடங்களாக விகாரையில் தங்கியிருந்து வீடுகளில் சரிந்து வளர்ந்து வரும் தென்னை மரங்களை இரும்பு கம்பி கேபிள் இழுத்து கட்டி வரும் நடமாடும் சேவையில் ஈடுபட்டு வரும் அல்பிட்டியைச் சேர்ந்த ஒருவரை 170 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்தனர்.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட வியாபாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த பொலிஸ் நிலைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




