பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூரிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்து கி.மீ. தொலைவில் பட்டித்திடல் கிராமம் அமைந்துள்ளது.
மல்லிகைத்தீவு கிராம சேவகர் எல்லைக்குள் அமைந்துள்ள இப்பூர்வீக கிராமத்தில் விவசாயம் செய்பவர்களும் கூலிவேலை செய்பவர்களும் அதிகமாக வாழ்கின்றார்கள்.
1987ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறீலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்கள் ஆங்காங்கே இடம் பெற்றவண்ணம் இருந்தன.
இராணுவத் தாக்குதல்
பட்டித்திடல் கிராமமும் 26.04.1987 அன்று இராணுவத் தாக்குதலுக்குள்ளாகியது.

பட்டித்திடல் கிராமத்திலிருந்து நெடுஞ்சாலையின் மேற்கே மல்லிகைத்தீவு சந்தியும் வாசிகசாலையும் உள்ளன.
அப்பகுதியில் மோதல் சம்பவங்கள் நடந்தது. அதனை அறிந்த மக்கள் தாங்கள் இராணுவத்தால் தாக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக ஊரைவிட்டு அகன்றுவிட்டனர்.
பழிதீர்க்கும் எண்ணத்தில் கிராமத்திற்குள் வந்த இராணுவத்தினர் மக்களை தேடி வந்த போது கிறிஸ்தவக் குடும்பமான பொன்னம்மா குடும்பத்தை சேர்ந்த பதினெட்டுப் பேர் தாங்கள் கிறீத்தவர்கள் என்பதால் தங்களுக்கொன்றும் நடக்காது என்ற நம்பிக்கையில் இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
வீடுவீடாகத் தேடிக்கொண்டு வந்த இராணுவத்தினர் இறைவழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் குற்றுயிரோடு இருந்தவர்களை வெட்டிவிட்டு அனைவரையும், குறிப்பாக குறை உயிரோடு இருந்தவர்களையும், வீட்டினுள் வைத்துத் தீயிட்டு படுகொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்தம் ஒரேகுடும்பத்தில் பதினேழு பேர் உயிரிழந்தனர். அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர்.
கன்னிவெடி தாக்குதல்
தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து கோணன் உலகநாதன் மற்றும் மேரி கணேசபிள்ளை ஆகியோர் மட்டுமே உயிர் தப்பினர்.
குறித்த கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் பிரதான வீதியில் வைத்து கன்னிவெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதன் பின்னணியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.
அத்துடன் இந்த கொலைச்சம்பவத்தின்போது அவர்களது உறவினரான மேரி கணேசபிள்ளை என்ற 50 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்து ஓடிச்சென்று மரங்களுக்குள் ஒழிந்து கொண்டு நடந்த சம்பவத்தை பார்த்ததாக அப்பேதைய பத்திரிகைகளுக்கு அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
“இராணுவம் உள்ளே நுழைந்தவுடன் வீட்டின் பெரியவரும் அவருடைய மகனும் பேசத் தொடங்கினார்கள். ஆனால் இராணுவத்தினர் உடனடியாக சரமாரியாக சுடத் தொடங்கி விட்டனர்.
பின்னர் பெண்களில் அவல சத்தம் கேட்டது. மறுபடியும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பெண்கள் மட்டும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் தள்ளாடியபடி வீட்டுக்கு வெளியே வந்தனர் ஆனால் இராணுவத்தினர் அவர்கள்மீது பனை ஓலைகளை அடுக்கி எண்ணை ஊற்றி தீயை வைத்தனர்.
பின்னர் வீட்டுக்கும் தீயை வைத்துவிட்டு அவர்கள் வந்த லொறியில் ஏறிச் சென்றுவிட்டனர்” என்று அப்பெண் கூறினார்.
இப்படுகொலைச் சம்பவம் தொடர்பாக கோணன் உலகநாதன் 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இவ்வாறு விபரித்தார்,
“நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக எந்த தொழிலுக்கும் செல்ல முடியாமலும், எந்த தொழிலும் செய்ய முடியாமலும் மிகுந்த கடினமான சூழல் நிலவியது.
இதனால் சில தேங்காய்களை சைக்கிளில் கட்டி எடுத்துக் கொண்டு குறித்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் மூதூர் சந்தையை நோக்கி புறப்பட்டேன்.
படுகொலைச் சம்பவம்
அங்கு சந்தையில் தேங்காய்களை விற்றுவிட்டு அதில் கிடைத்த பணத்தில் வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக் கொண்டு மூதூர் தேவாலயத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வரும்வேளையில் எமது ஊரில் இராணுவம் புகுந்து எல்லோரையும் சுடுவதாக கேள்விப்பட்டேன்.

இதனால் அவசர அவசரமாக வாங்கிவந்த சாமான்களை வயல்வெளிக்குள் தூக்கி எறிந்துவிட்டு குறுக்கு வழியாக வீட்டைநோக்கிச் சென்றேன்.
எனினும் அங்கு இராணுவம் நிற்பதாகவும் அங்கே இப்போது செல்ல வேண்டாம் என ஊரார்கள் மறித்தார்கள்.
இதனால் மதியம்1 மணியளவில் வீட்டுக்குச் சென்றேன் அங்கு அனைவரும் சுட்டும் எரித்தும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
அதனைப்பார்த்ததும் நானும் அந்த நெருப்பில் பாய்ந்து இறப்பதற்கு சென்றேன். என்னை ஊர் மக்கள் விடவில்லை. பின்னர் மறுநாள் காலை அனைவருடைய உடல்களும் எமது மயாணத்தில் பாரிய குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் நான் திருகோணமலையில் இருக்கும் மெதடிஸ்த திருச்சபைக்கு வந்து விட்டேன் அவர்கள்கள்தான் எனக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்தார்கள்.
குறித்த படுகொலைச் சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் காலை கன்னிவெடியில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தார்கள்.
இதனால் ஊர் மக்கள் எல்லோரும் காட்டுக்கு ஓடிவிட்டார்கள் எங்கள் குடும்பம் கிறிஸ்தவ குடும்பம் என்பதால் இராணுவத்தினர் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பம் மாத்திரம் ஓடாமல் வீட்டிலேயே இருந்தார்கள்.
ஏற்கனவே ஒரு முறையும் இராணுவத்தினர் வந்தபோது எனது அடையாள அட்டையை காண்பித்ததும் பார்த்துவிட்டு சென்று விட்டார்கள். அதனாலேயே எங்கள் குடும்பம் மட்டும் ஓடாமல் இருந்தனர்.
இப்படுகொலைச் சம்பவத்தில்,
01. உலகநாதன் ஜெயப்பிரியா (வயது06)
02. உலகநாதன் ஜெயரதி (வயது 01)
03. உலகநாதன் யோகேஸ்வரி (வயது 26)
04. கோணன் பத்தினியன் (வயது 42)
05. பத்தினியன் சீதையம்மா (வயது 34)
06. பத்தினியன் நேசன் (வயது 17)
07. பத்தினியன் பிரகாஸ் (வயது 13)
08. பத்தினியன் சோபனா (வயது 12)
09. பத்தினியன் கிருசாந்தி (வயது 10)
10. பத்தினியன் அற்புதராசா (வயது 08)
11. கோணன் பொன்னம்மா (வயது 60)
12. கோணன் மேரி (வயது 23)
13. சின்னத்துரை யோகேஸ்வரி (வயது 29)
14. சிந்தாமணி பாலமுருகன் (வயது 11)
15. சிந்தாமணி யோகராசா (வயது 14)
16. சிந்தாமணி கோகுலேஸ்வரி (வயது 15)
17. சிந்தாமணி செந்தில்மணி (வயது 30) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 26 April, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.