ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றத் தயாராகும் ஜேர்மனி
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டவுடன், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றும் சர்வதேசக் கூட்டுப் பணியில் இணைந்து செயல்பட ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, முதற்கட்டமாக ஜேர்மனியக் கடற்படையின் 'ஃபுல்டா' (Fulda) எனும் கண்ணிவெடி அகற்றும் போர்க்கப்பல் அடுத்த சில நாட்களில் மத்திய தரைக்கடல் பகுதிக்குப் புறப்படும் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுமார் 45 சிப்பாய்களைக் கொண்ட இந்தக் கப்பல், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேர்மனியின் பங்களிப்பு
ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான கடல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் சர்வதேசக் கூட்டணியில் ஜேர்மனியின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

போர் முழுமையாக முடிவுக்கு வந்து, இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர அமைதி ஏற்பட்ட பின்னரே இந்தக் கப்பல் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையும்.
அத்துடன், இதற்கு ஜேர்மனிய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் அனுமதியும் பெறப்பட வேண்டும். ஜேர்மனியைத் தொடர்ந்து, துருக்கியும் இந்தப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடத் தான் தயாராக இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
போர்ப்பதற்றம்
உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாகப் பல கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

போர் நின்றவுடன் இந்தப் பாதையை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்ற ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.