மட்டக்களப்பை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி
தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகங்களில் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று(17.09.2023) களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு போன்ற பல பகுதிகளிலும் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்வு
செப்டம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரைக்கும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் நடைபெறும். செப்டம்பர் 15 ஆம் திகதி யாழ் நல்லூரிலே அவர் உண்ணா நோன்பை ஆரம்பித்த தினம் என்பதால் வடக்கு கிழக்கில் மக்கள் திலீபனை நினைவு கூருதலை ஆரம்பித்திருந்தார்கள்.
எமது இந்த ஊர்த்தி பவனியானது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவிலிலிருந்து ஆரம்பமாகி அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஊடாக மக்களின் அஞ்சலிக்காகச் சென்று பின்னர் முல்லைத்தீவு, மன்னார் கிளிநொச்சி ஊடாக நல்லூரைச் சென்றடைவது வழமை.

அந்த வகையில் பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகிய ஊர்தி பவனி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
26 ஆம் திகதி திலீபன் உயிர் தியாகம் செய்த நல்லூரிலே மிகப் பிரம்மாண்டமான இறுதி வணக்க நிகழ்வு நடைபெறும் என இதன்போது கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.




