ஓய்வுபெற்ற சுங்க அதிகாரிக்கு அரச உயர் பதவி - சூடுபிடிக்கும் 323 கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரம்
கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர், ஓய்வுபெற்ற பின்னர் அரசாங்கத்தில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கம் நல்லாட்சி கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள்
இதற்கிடையில், கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்ட நிலையில், விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா, “தாமதமாவது சிக்கலானது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்புத் துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, தனது இறுதி அறிக்கையில் கொள்கலன்கள் நேரடிப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கலன்களை அரசாங்கம் விடுவித்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.