காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்! 25 ஆயிரம் முறைப்பாடுகள்! விசாரணைகள் தீவிரம்
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு இதுவரை சுமார் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அந்த அலுவலகத்தின் சபை உறுப்பினர் யோகராஜா தெரிவித்துள்ளார்.
இவற்றில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணைகள்
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த நவம்பர் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் மூன்று நாட்களாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, மொத்தமாக 350 விண்ணப்பதாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 20ஆம் திகதி நண்பகல் 12 மணி வரையில் 228 பேர் சமூகமளித்திருந்தனர்.
முதல் நாள் 94 பேரும், இரண்டாம் நாள் 89 பேரும், இறுதி நாளில் நண்பகல் வரை 45 பேரும் தமது வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த விசாரணைகளில் கலந்துகொண்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்களும் தமது கருத்துக்களை ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்படுவதுடன், வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.