மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பால் கூடுதலாக செலவாகும் 232 மில்லியன்
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்புக்கு மாதாந்தம் 232 மில்லியன்
ரூபா கூடுதல் செலவாகும் என நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
குறித்த கூட்டமானது, நேற்றைய தினம் (06.03.2024) இடம்பெற்றிருந்தது.
இதன்போது, சாதாரண பிரஜைகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் இந்த வேளையில் தமது சம்பளத்தை அதிகரிப்பது நியாயமற்றது என கட்சித் தலைவர்கள் மத்திய வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
உத்தியோகபூர்வ அறிக்கை
மத்திய வங்கி அதிகாரிகள் சம்பள உயர்வைப் பெறுவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருந்தபோதிலும் கூட, இந்த நாட்டிலுள்ள மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகும் நிலையில் அவர்கள் சம்பள உயர்வைக் கைவிட்டிருக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் கருதுவதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில் திணைக்களத்தில் கூட்டு ஒப்பந்தம் எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் இந்த சம்பள உயர்வு சட்டவிரோதமானது என கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுயாதீன அமைப்பாக மத்திய வங்கி
பொருளாதாரம் தொடர்பில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே மத்திய வங்கி ஒரு சுயாதீன அமைப்பாக மாற்றப்பட்டுள்ளதாகவும், தமது சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல எனவும், மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு கட்சி தலைவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
அது மாத்திரமன்றி, முன்னதாக வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும் கூட்டு ஒப்பந்தம் பதிவு செய்யப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |