22 ஆவது திருத்தத்தை எம் மக்கள் சக்தியால் தோற்கடிக்க வேண்டும் - அழைப்பு விடுத்த சஜித்
அநுர அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், எமது மக்கள் சக்தியைக் கொண்டு அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இப்பாகமுவ பாங்கொல்லையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசின் திட்டம்..
அவர் மேலும், "தற்போது நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் சவால்களும் நிலவும் சூழ்நிலையில், அரசு 22ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயன்று வருகின்றது.

இந்தத் திருத்தத்தின் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, ஜனநாயகம், நீதி வழங்கும் பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை சீர்குலைக்கப்படுவதுடன், நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் அடிமையாக மாற்றி நாட்டைச் சர்வாதிகாரப் ஆட்சியை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும்.
அரசுக்கு நாடாளுமன்றத்தில் 159 பெரும்பான்மைப் பலம் இருந்தாலும், மக்கள் சக்தியைக் கொண்டே இந்தத் திருத்தத்தை முறியடிக்க வேண்டும். மக்கள் சக்தியை எப்போதுமே அற்பமாக எடைபோட முடியாது.
இதே மக்கள் சக்தியினாலேயே 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கூட வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. நாட்டில் அநுரகுமார திஸாநாயக்க தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயல்கின்றார். இந்தச் சர்வாதிகாரப் பயணத்துக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது.” என்றார்.